ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்திருப்பதும், பதிலுக்கு மோடி, அசோக் கெலாட்டைப் புகழ்ந்திருப்பதும் அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
1913 ஆம் ஆண்டு, மங்கார் என்ற மலைப் பகுதியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் ஆண்கள் என பில் பழங்குடியினரை சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கொடூர தாக்குதலை நடத்தின.
இந்த சம்பவத்தில் 1,500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர். 1913ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், ’மங்கார் தம் கி கவுரவ் கதா’ என்ற பெயரில் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று இன்று (நவம்பர் 1) நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், பேசிய ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ‘’பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அதிகளவு மரியாதை கிடைக்கிறது.
காரணம், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் மகாத்மா காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் அவருக்கு மரியாதை கிடைக்கிறது.
இதனை உலக நாடுகள் உணரும்போது, அந்த நாட்டில் இருந்து பிரதமர் ஒருவர் வருகிறார் என அவர்கள் பெருமையாக உணர்கின்றனர்” எனப் பேசியிருந்தார்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, அசோக் கெலாட்டை பதிலுக்கு புகழ்ந்து தள்ளினார்.
அவர் பேசுகையில், ”முதல்வராக நானும் அசோக் கெலாட்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
பல முதல்வர்களில் அசோக் கெலாட் மிகவும் சீனியர் முதல்வராக இருந்தார். இப்போது முதல்வராக இருப்பவர்களில்கூட மிகவும் சீனியர் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும்கூட” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் முதல்வர் பிரதமர் மோடியைப் புகழ்ந்திருப்பதும், பதிலுக்கு பிரதமர் காங்கிரஸ் முதல்வரை புகழ்ந்திருப்பதும் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் நேரு
ரஜினிகாந்த்தை வரவேற்ற கர்நாடக அமைச்சர்!