வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உடல் நலம் பற்றிய தனியார் மருத்துவமனையின் புல்லட்டின் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்டோபர் 1 ஆம் தேதி மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றார். அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 10 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட பிறகு டெல்லி சென்ற அவர் திரும்பிய நிலையில் அவருக்காக பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், ‘அண்ணா… இன்னும் ரெண்டு நாளைக்கு கதை எழுதுங்கண்ணா’ என்று காத்திருந்த பத்திரிகையாளர்களை சீரியசாக கேலி செய்துவிட்டு புறப்பட்டார்.
இன்று அக்டோபர் 4 ஆம் தேதி அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவருக்கு நுரையீரல் அழற்சித் தொற்று ஏற்பட்டுள்ளதால் இரு வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மூன்றாம் கட்ட நடைப் பயணம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு பதில் 16 ஆம் தேதியன்று தொடங்கும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை அக்டோபர் 3 ஆம் தேதி இரவு சென்னை திரும்பிய நிலையில் டெல்லியில் அண்ணாமலைக்கும் தேசிய தலைமைக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி தலைநகர வட்டாரங்களில் விசாரித்தபோது சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.
அக்டோபர் 1 ஆம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, மறுநாள் அக்டோபர் 2 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். ஏற்கனவே தமிழக விவகாரங்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் தேசிய தலைமை அறிக்கை கேட்டு வாங்கியதாக செய்திகள் வந்த நிலையில் நிர்மலா உடனான அண்ணாமலையின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பின் போது தனது தரப்பு நிலைப்பாட்டை முழுவதுமாக நிர்மலாவிடம் விளக்கினார் அண்ணாமலை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக, உங்களைக் காரணமாக சொல்லிவிட்டு வெளியே போயிருப்பதை தேசிய தலைமை வருத்தத்தோடு பார்க்கிறது என்று அண்ணாமலையிடம் கூறியிருக்கிறார் நிர்மலா. ‘அவர்கள் என்னைக் காரணமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் மட்டுமே காரணமல்ல. அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.
இதன் பின் தனது வழிகாட்டியும் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளருமான பி.எல். சந்தோஷை சந்தித்தார். அதன் பிறகு அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். சந்தோஷுடனான சந்திப்பின்போது, ‘அதிமுக கூட்டணியை விட்டுப் போனது அமித் ஷாவுக்கும் மோடிக்கும் மிகப்பெரிய வருத்தத்தை உண்டுபண்ணியிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தேசிய தலைமை வற்புறுத்தி வரும் நிலையில்… உங்களது மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் சேதாரத்தை சந்தித்துள்ளது. இனி கூட்டணி பற்றியோ, யார் யார் நமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்ததெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பது பற்றியோ தேசிய தலைமை முடிவெடுத்துக் கொள்ளும். உங்களுக்கு என்ன பணி கொடுக்கப்பட்டதோ அதை மட்டும் பாருங்கள்’ என்று சந்தோஷ் கூறியுள்ளார். அதையே ஜேபி. நட்டாவும் அண்ணாமலையிடம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதி இரவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் சந்திக்க அண்ணாமலை முயற்சித்தும் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தெலங்கானா சென்று நேற்று இரவு டெல்லி திரும்பினார். அதுவரை காத்திருந்தும் அண்ணாமலையால் அமித் ஷா, மோடியை சந்திக்க இயலவில்லை. அதனால் ஏமாற்றத்தோடு நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.
டெல்லியில் இருந்தபடியே அமர் பிரசாத் ரெட்டியைத் தொடர்புகொண்டு அடுத்த கட்ட பயணத் திட்டம் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதன்படி அக்டோபர் 6 மேட்டுப்பாளையத்தில் இருந்து மூன்றாம் கட்ட நடைப் பயணம் என்று அமர்பிரசாத் ரெட்டி அறிவித்தார். ஆனால் அதன் பின் டெல்லியில் நடந்த அடுத்தத்த மாற்றங்களால் அண்ணாமலை கடும் அப்செட் ஆகிவிட்டார். நேற்று இரவு சென்னை வந்தவருக்கு தொடர் இருமல் இருந்துள்ளது.
சென்னை விமான நிலையம் வந்ததுமே மாநில மருத்துவ அணி நிர்வாகியான டாக்டர் பிரேம் (இவர் மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமியின் மகன்) அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லாமல் நேராக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு சென்றார் அண்ணாமலை. அங்கே இருக்கும் டாக்டர் ஜாய் வர்கீஸிடம் முன்கூட்டியே சொல்லப்பட, அவர்தான் அண்ணாமலையை பரிசோதித்துள்ளார். அதன் பிறகே இரு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் நடைபயணம் பத்து நாட்கள் தள்ளிப் போடப்பட்ட அறிவிப்பும் வெளியானது. அதேநேரம் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை சில நிமிடங்கள் வந்து பங்கேற்றுச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் உடல் நிலை இப்படி என்றால்… டெல்லி சென்று வந்ததில் இருந்து அண்ணாமலை தனது அதிகாரம் பறிக்கப்பட்டதாக உணர்கிறார் என்கிறார்கள் அண்ணாமலையை பற்றி அறிந்தவர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இடைநிலை, பகுதிநேர, டெட் ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
Comments are closed.