ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கும் – தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் இடையேயான தொடர்பு மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 25ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறது பாஜக.
அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸை தொடர்புபடுத்தி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
‘சோனியா காந்திக்கு ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்களுக்கான மன்றத்துடன் (Forum for Democratic Leaders of Asia Pacific) தொடர்பு உள்ளது என்றும் இதில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசப்படுவதாகவும், இந்த மன்றத்துக்கு ஜார்ஜ் சோரோஸ் அறக்கட்டளை நிதியுதவி வழங்குவதாகவும்’ பாஜக கூறுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ சோனியா காந்திக்கும், ஜார்ஜ் சோரஸ் நிதி அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு தீவிரமானது. காஷ்மீரை தனிநாடு என கூறும் சக்திகளோடு காங்கிரஸ் இணைந்திருக்கிறது.ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்களுக்கான மன்றத்தில் சோனியா இணைத் தலைவராக இருக்கிறார்.
ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இன்று (டிசம்பர் 11) 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எம்.பி.க்களும், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜுஜு, “மாநிலங்களைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர். “அவைத் தலைவரை மதிக்கத் தெரியாத எதிர்க்கட்சிகளுக்கு தீர்மானம் கொண்டு வர எந்த உரிமையும் கிடையாது.
நீங்கள் நாட்டுக்கு எதிராக நிற்கிறீர்கள். நமது மாநிலங்களவைத் தலைவரை போல ஒருவரை கண்டுபிடிப்பது கடினம். சோனியா காந்திக்கும் ஜார்ஜ் சோரஸுக்கும் என்ன சம்பந்தம்? அது வெளிப்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளின் அமளியால் 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 2 மணிக்கு தொடங்கிய போது, மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியினரும் தங்களது கோரிக்கையை வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் நட்டா, “சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்புடையது. ஆனால் எதிர்க்கட்சிகள் திசை திருப்ப முயல்கின்றன. அதனால் தான் மாநிலங்களவை தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் நட்டாவின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அவையில் தங்கரின் நடவடிக்கைகள் ஏற்க முடியாத வகையில் இருப்பதாகவும், பா.ஜ.க. செய்தி தொடர்பாளரை விட அந்த கட்சிக்கு ஜெகதீப் தங்கர் அதிக விசுவாசமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அதானி முறைகேட்டை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்த ஜெகதீப் தங்கர், நேற்று அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சியினருக்கு அனுமதியளித்தார்.
இந்தநிலையில் தான் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
10.5%… ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு – ராமதாஸ் போராட்ட அறிவிப்பு!
டெல்லி சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை… கெஜ்ரிவால் அறிவிப்பு!