ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக இருந்து வந்தார். டெல்லிக்கு சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மநீம வேட்பாளரை அறிவிப்பாரா? அல்லது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என கேள்வி எழுந்தது.
இந்தசூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டிருந்த நிலையில் இன்று (ஜனவரி 25) மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எனது நண்பரும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறோம். அவருக்காக நானும் எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம்.
18 வயதை பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அனைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அ.அருணாசலத்தை நியமிக்கிறேன்” என தெரிவித்தார்.
பிரியா
குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்: தேர்வான தமிழக போலீசார்!
ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!