ஒரு சீட் கேட்கும் மமக… திமுக பதில் என்ன?

Published On:

| By Aara

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வருகிற மக்களவைத் தேர்தலில்  ஓர் இடம் வழங்கப்படுமா என்ற கேள்வி அக்கட்சி நிர்வாகிகள் இடையிலும் தொண்டர்கள் இடையிலும் எதிர்பார்ப்போடு ஏற்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 7ஆம் தேதி சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்… வருகிற மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு திமுக கூட்டணியில் ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. 2019 மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்காக மனிதநேய மக்கள் கட்சி அரும்பாடுபட்டது.

4 பேர், மேடை மற்றும் , ’இறைவனின்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று இப்போது குழு தீர்மானிக்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மனிதநேய மக்கள் கட்சி பொது குழுவில் பேசிய நிர்வாகிகள் பலரும், திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

நாம் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் பொதுக்குழு முடிந்த பின் பேசினோம்.

“பொதுக்குழு கூட்டத்துக்கு முதல் நாளே பிப்ரவரி 6ஆம் தேதி அமைச்சர் உதயநிதியை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தார்கள். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ததற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதோடு பிப்ரவரி 7ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் பற்றியும் உதயநிதியிடம் தகவலாக தெரிவித்தார்கள். அப்போது உதயநிதி பொதுக்குழு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

4 பேர், மேடை மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
இப்படி உதயநிதியின் அட்வான்ஸ் வாழ்த்துகளோடு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில்தான் ஒரு எம்பி சீட் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி ஆம்பூர், வாணியம்பாடி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், திருவாடானை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பத்து தொகுதிகளை அடையாளப்படுத்தி கொடுத்து… இவற்றில் இருந்து எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம்.
ஆனால் அப்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை தொகுதியையும் பாபநாசம் தொகுதியையும் ஒதுக்கியது திமுக. இந்த அணுகுமுறை மிக புதியதாக இருந்தது.

காரணம், இந்த இரண்டு தொகுதிகளிலுமே முஸ்லிம் வாக்காளர்கள் 10 சதவீதம் கூட இல்லை. மேலும் இந்த இரண்டு தொகுதிகளும் திமுகவுக்கு வெற்றிகரமான தொகுதியாக முன்பு இருந்ததில்லை. மணப்பாறை அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டது. பாபநாசம் தொகுதி மூப்பனாரின் செல்வாக்கு, பிறகு அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்தது. அதாவது முஸ்லிம்கள் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளில் மமக போட்டியிட வேண்டாம்  என திமுக நினைக்கிறதா என்று கூட அப்போது எங்கள் கட்சியிலேயே பேச்சு எழுந்தது.

கூட்டம் இன் படமாக இருக்கக்கூடும்

ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் நாங்கள் அந்த இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

இந்த நிலையில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிற நிலையில், 2014 இல் வழங்கப்பட்டது போல இந்த முறை மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

அந்த தேர்தலில் போட்டியிட்ட மயிலாடுதுறை தொகுதியை மீண்டும் வழங்கினாலும் எங்களுக்கு சரிதான். இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருக்கிற 39 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும் நாங்கள் அங்கே போட்டியிட தயாராக இருக்கிறோம். ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஈரம் காயாத நிலையில் கூட கமல்ஹாசனுக்கெல்லாம் சீட் வழங்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் திமுகவோடு தோளோடு தோளாக நிற்கும் மமகவுக்கு ஒரு சீட் கொடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இதுகுறித்து முதலமைச்சரை சந்திக்கவும் முயற்சித்து வருகிறோம். மக்கள் நீதி மய்யத்துக்கு திமுகவில் ஒரு சீட் என்றால், மமகவுக்கு அதைவிட அதிக உரிமை திமுக கூட்டணியில் உண்டு”  என்று கூறினார்கள்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, “2014 இல் பெரிய கூட்டணி இல்லை. காங்கிரஸும் அப்போது தனித்துப் போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி வலுவாக இருக்கிறது.  அறிவாலயத்துக்கு வந்து கூட்டணிக் கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அதன்படியே காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளை சந்தித்துள்ளோம். அந்த பட்டியலில் மனித நேய மக்கள் கட்சி இல்லை என்பது தான் தற்போதைய நிலவரம். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் மாற்றம் வரலாம்” என்கிறார்கள்.

வேந்தன்

நிதிப்பகிர்வில் ஓரவஞ்சனை: டெல்லியில் திமுக, கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்!

செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் ரெய்டு: பின்னணி என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel