சமீபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவுக்கு மாறினார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். எம்.எல்.ஏகள் கட்சி மாறுவது பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எம்.எல்.ஏ-கள் கட்சி மாறுவதும், அதன் காரணமாக மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுவதும் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. இது குறித்த ஒரு விரிவான பார்வையை பார்ப்போம்.
கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர்?
2016 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் Association For Democratic Reforms (ADR) என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை வெளியிட்டது. ADR என்பது தேர்தல்கள் மற்றும் கட்சிகளைக் குறித்து ஆய்வு செய்யக் கூடிய ஒரு நிறுவனமாகும். அந்த ஆய்வு பல முக்கியமான தகவல்களை சொல்கிறது.
• 2016 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 405.
• எம்.எல்.ஏ-கள் கட்சி மாறியதால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 170 எம்.எல்.ஏ-கள் இந்த காலக்கட்டத்தில் வேறு கட்சிகளுக்கு மாறியுள்ளனர். இது மொத்தம் கட்சி மாறியவர்களில் 42% ஆகும்.
• அதே சமயம், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-களில் 18 எம்.எல்.ஏ-கள் கட்சி மாறியுள்ளனர்.
• எம்.எல்.ஏ-கள் கட்சி மாறுவதால் அதிகம் பலனடைந்த கட்சியாக பாஜக இருக்கிறது. மொத்தம் கட்சி மாறிய 405 எம்.எல்.ஏ-களில் 182 பேர் பாஜகவில் தான் இணைந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 45% ஆகும்.
• அதேசமயம் 38 எம்.எல்.ஏ-கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
• கட்சி மாறியதற்குப் பிறகு எம்.எல்.ஏ-களின் சொத்து மதிப்பு சராசரியாக 39% அதிகரித்துள்ளது.
• எம்.பிக்களைப் பொறுத்தவரை 12 லோக்சபா எம்.பிகளும், 16 ராஜ்யசபா எம்.பிகளும் கட்சி தாவியுள்ளனர்.
கூவத்தூர் அரசியல் எங்கிருந்து தொடங்கியது?
எம்.எல்.ஏ-கள் கூட்டமாக கட்சி தாவுவதும், அதனைத் தடுக்க சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை அவர்களை ரிசார்ட்களில் தங்க வைப்பதும் என எம்.எல்.ஏ-கள் மீது குதிரை பேரம் நடத்தப்படுவது சமீப காலங்களில் தொடர் நிகழ்வுகளாக மாறிவிட்டது. நம் ஊரில் இதனை கூவத்தூர் அரசியல் என சமீப காலங்களில் குறிப்பிடுகிறோம். இதே அரசியலை வட மாநிலங்களில் ‘Aaya Ram Gaya Ram’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி குறிப்பிடுவார்கள்.
இந்த சொற்றொடரின் பயன்பாடு 1967-ல் ஹரியானாவில் தொடங்கியது. ஹரியானாவில் கயா லால் என்பவர் அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த அவர் சில நாட்களிலேயே மூன்று முறை கட்சி மாறினார். இதைத் தொடர்ந்து நடந்த கட்சி தாவல்களால் ஹரியானா அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அப்போது கயா லாலை மையப்படுத்தி பயன்படுத்திய இந்த ‘Aaya Ram Gaya Ram (ராம் வந்தார்; ராம் போனார்)’ என்ற சொற்றொடர்தான் இன்று வரை கட்சித் தாவல்களை குறிப்பதற்கு வட மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது. கட்சித் தாவல்களை தடை செய்ய வேண்டும் என்ற விவாதத்திற்கான துவக்கப் புள்ளியாக கயா லால் விவகாரம் மாறியது.
அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-கள் கட்சி மாறுவதைத் தடுக்க பண்ணை வீட்டில் தங்க வைப்பதும் ஹரியானாவில் தான் தொடங்கியது. அப்போது பண்ணை வீட்டு அரசியலாகத் தொடங்கியதுதான் இன்றைக்கு ரிசார்ட் விவகாரமாக வந்து நிற்கிறது.
கட்சித் தாவல் தடை சட்டம் என்ன சொல்கிறது?
எம்.எல்.ஏ-கள் ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்ற பிறகு இன்னொரு கட்சிக்கு தாவுவதைத் தடுப்பதற்காக, முதன்முறையாக கட்சித் தாவல் தடைச் சட்டம் ராஜீவ் காந்தி அரசாங்கத்தால் 1985-ல் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒரு எம்.எல்.ஏ ஒரு கட்சியின் சார்பாக நின்று வெற்றி பெற்ற பிறகு, மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அவர் அந்த எம்.எல்.ஏ பதவியை இழந்துவிடுவார்.
அப்படி பதவியை இழக்காமல் மாற வேண்டுமென்றால், கட்சியின் மொத்த எம்.எல்.ஏ-களில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்போது கட்சியிலிருந்து விலகினால் அது கட்சியில் ஏற்பட்ட பிளவாகப் பார்க்கப்படும். அதனால் அவர்களின் பதவி பறிக்கப்படாது என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
2003-ம் ஆண்டு இந்த சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முன்பு மூன்றில் ஒரு பங்கு ஆதரவு வேண்டும் என்று இருந்த நிபந்தனை, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்பதாக மாற்றப்பட்டது.
மேலும் சட்டசபையில் சபாநாயகரின் பங்கு என்பது முக்கியமான ஒன்றாக மாற்றப்பட்டது. கட்சியிலிருந்து விலகிய எம்.எல்.ஏ-களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கட்சியிலிருந்து மனுவை அளிக்கும்போது அதன் மீது முடிவெடுக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு அளிக்கப்பட்டது.
கட்சி தாவலால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட மாநிலங்கள்
கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் எம்.எல்.ஏ-களின் கட்சித் தாவல் சம்பவங்களால் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்றுள்ளது. அந்த மாநிலங்களில் எம்.எல்.ஏ-களின் மீது பாஜக குதிரை பேரம் நடத்தியதாக எதிர் கட்சிகளால் தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. எந்தெந்த மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்றன என்பதை சிறு குறிப்புகளுடன் பார்ப்ப்போம்.
அருணாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. 2014-ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 47 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 1 ஆக மாறியது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சிக்கு மாறினர். பின்னர் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்தது. காங்கிரசிலிருந்து வெளியேறிய பெமா காண்டு முதலமைச்சரானார்.
மணிப்பூர்
மணிப்பூரில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரசும், 21 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததுடன் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவின் ஆதரவையும் சேர்த்து ஆட்சியில் அமர்ந்தது பாஜக. அதற்குப் பின்னர் மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் பாஜகவில் இணைந்தனர்.
கர்நாடகா
கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தன. அடுத்த ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 3 எம்.எல்.ஏகளும் பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்தது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் சுயேட்சைகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில் காங்கிரசிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 21 எம்.எல்.ஏக்கள் காங்கிரசிலிருந்து விலகி பின்னர் பாஜகவில் இணைந்தனர். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்தது.
ஆனால் 2022-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 37 எம்.எல்.ஏ-கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளம்பினர். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்குத்தான் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதலமைச்சரானார்.
அத்தோடு மகாராஷ்டிராவின் அரசியல் விளையாட்டு நிற்கவில்லை. இந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் தலைமையில் எம்.எல்.ஏகள் அக்கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு எதிராக வியூகம் வகுத்தனர். 41 எம்.எல்.ஏ-கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று அறிவித்தார் அஜித் பவார். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது. அஜித் பவார் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் நியமன எம்.எல்.ஏ-களாக 3 பேர் நியமிக்கப்பட்டனர். 2021-ம் ஆண்டின் துவக்கத்தில் 5 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். 2 எம்.எல்.ஏ-கள் பாஜகவில் இணைந்தனர். நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்க்கப்பட்டது.
கோவா
கோவாவில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து 13 எம்.எல்.ஏ-கள் பாஜகவில் இணைந்தனர். இதனால் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்தது.
இப்படி எம்.எல்.ஏ-களில் கட்சித் தாவல் என்பது ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கியமான காரணமாக இருந்து வரும் நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 இடங்களில் 40 தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது. 25 தொகுதிகளை பாஜக வென்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தும், எம்.எல்.ஏ-கள் மாற்றி வாக்களித்ததன் காரணமாக காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்திருக்கிறது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் பாஜக முயற்சித்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசின் ஆட்சி நீடிக்குமா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எம்.எல்.ஏ-களின் கட்சித் தாவல் என்பது இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கும் மிக முக்கியமான காரணியாக மாறியிருக்கிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பா.ரஞ்சித்தின் ‘ஜெ பேபி’ ரிலீஸ் தேதி இதுதான்!
பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைப்பு; பயணிகள் மகிழ்ச்சி
ஓடிடி-யில் வெளியாகும் ‘ப்ளூ ஸ்டார்’ வெளியீட்டு தேதி இதுதான்!
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு நிதி கேட்டு ஸ்டிக்கர்!