மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் சிதைக்கு அவரது மகள் தீமூட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, நேற்று(ஜனவரி 4) வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீடான குடியரசு இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இரண்டாம் நாளாக இன்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசு, அமைச்சர் சு.முத்துசாமி சபாநாயகர் அப்பாவு,
கணேசமூர்த்தி எம்பி, கார்த்திக் சிதம்பரம் எம்பி, ஜோதிமணி எம் பி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திருமகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி கொடி போர்த்தப்பட்ட திருமகன் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
வழி நெடுக திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பன்னீர்செல்வம் பூங்கா மணிக்கூண்டு, ஆர் கே வி சாலை, காவேரி சாலை கருங்கல்பாளையம் வழியாக காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் திருமகன் உடல் தகனம் செய்யப்பட்டது.
திருமகன் ஈவெரா.வின் மகள் சமன்னா தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார்.
பின்னர் மின் மயான வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
திருமகன் உடல் தகனம் செய்யப்பட்ட பின், ஈரோடு மின் மயான வளாகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பேசும் போது, கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
கலை.ரா
“தனக்கு ஏற்றபடி விதியை மாற்றியுள்ளார் ஈபிஎஸ்” – ஓபிஎஸ் அடுக்கடுக்கான புகார்!
இந்தியளவில் துப்பாக்கி சுடும் போட்டி: தயாராகும் தமிழக போலீஸ்!