எதிலும் வல்லவர் எ.வ.வேலு: திருவண்ணாமலையில் திகைத்த ஸ்டாலின்

அரசியல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜூலை 8, இன்று ஜூலை 9 என இரு நாள் பயணமாக திருவண்ணாமலை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக திருப்பத்தூர், கரூர், நாமக்கல் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த வாரம் திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று (ஜூலை 8) காலையிலேயே சாலைமார்க்கமாக சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டிவனம், மயிலம், செஞ்சி வழியாக வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆரம்பமான மேல்பெண்ணாத்தூரில் மாசெவும் பொதுப்பணித்துறை-நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பின் திருவண்ணாமலையில் இருக்கும் எ.வ. வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

விழாக் கோலமென்றால் இதுதான்

மாலை 6 மணிக்கு விருந்தினர் மாளிகையின் பின் பக்க வாசல் வழியாக மணலூர்பேட்டை சாலை மார்க்கமாக திருவண்ணாமலையை நோக்கிப் புறப்பட்டார் ஸ்டாலின். வழியெங்கும் இரு பக்கமும் திமுக தொண்டர்களும் மக்களும், பெண்களும் குழந்தைகளும் திரண்டிருந்தனர். முதல்வரின் வாகனம் வேகம் எடுக்க முடியாத அளவுக்கு சாலையோரம் திரண்டிருந்த மக்கள், வேனை நெருங்கிவந்து மனுக்களையும் புத்தகங்களையும் சால்வைகளையும் கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு நூறு அடிக்கும் இடையில் விதவிதமான இசைக் கலைஞர்கள் நின்று செண்டை மேளம், நாதஸ்வரம்- தவில், பேண்டு வாத்தியங்கள் என்று தங்களது இசைக் கருவிகள் மூலம் முதல்வரை வரவேற்றனர். இன்னொரு பக்கம் மக்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். விழாக் கோலம் என்று சொல்வார்களே….அந்த வார்த்தை திருவண்ணாமலையிலே நிஜமாக்கப்பட்டிருந்தது.

முதல்வரின் வாகனத்தின் முன்னே பாதுகாவலர்கள் மக்களை ஓரங்கட்ட முயலும் போதெல்லாம்… ‘விடுப்பா… விடுப்பா…’ என்று முதல்வர் மெல்லிய குரலில் அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். இதனால் கூட்டம் திரண்டு நிற்கும் இடங்களிலெல்லாம் முதல்வரின் வாகன டிரைவர் தானாகவே வண்டியை ஸ்லோ செய்துவிட்டார். மக்கள் கொடுக்கும் மனுக்கள் எல்லாம் முதல்வரின் கைக்கு சென்றன.

‘வாங்கோண்ணா… வாங்கோ’

இப்படியாக மக்கள் வெள்ளத்தில் நீந்திய முதல்வரின் வாகனம் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் இருக்கும் பழைய திமுக அலுவலகத்துக்கு வந்தது. அங்கேதான் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் அழைத்துவரப்பட்டிருந்த சுமார் ஆயிரம் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மிக நீண்ட வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்த சிவாச்சாரியார்கள் இடையே முதலில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘2015 ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் முதல்வர் நமக்கு நாமே பயணத்துக்காக திருவண்ணாமலை வந்தபோது உங்களை சந்தித்தார். அதை ஞாபகம் வைத்திருந்து இந்த முறையும் சந்திக்க விரும்பினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருப்பதால் உங்கள் எல்லாருக்கும் முதல்வர் கையால் நலத்திட்ட உதவிகள் வழங்க முடியவில்லை. முக்கியமான முன்னோடி சிவாச்சாரியார்கள் பத்து குடும்பங்களுக்கு மட்டும் முதல்வர் வழங்குவார்” என்று சொல்லி அமைச்சர் வேலு சிவாச்சாரியார்களின் பெயர்களை வாசிக்கத் தொடங்கினார். நேரமாகிவிட்டதால், “வாங்கோண்ணா… வாங்கோ’ என்று சிவாச்சாரியர்களின் பாஷையிலேயே வேலு அழைக்க அங்கே கலகலப்பு.

சிவாச்சாரியார்களுக்கு தன் கையால் நலத்திட்ட உதவிகளைக் கொடுப்பதற்காக முதல்வர் மேடையில் இருந்து கீழே இறங்கினார். பின் அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை சிவாச்சாரியார்களையும் சந்திக்க விரும்பிய முதல்வர், அப்படியே நடக்கத் தொடங்கினார். முழுமையாக அனைத்து சிவாச்சாரியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தேடிச் சென்று சந்தித்தார். குழந்தைகளை கன்னத்தில் கிள்ளியும், பாட சாலையில் பயின்று வரும் இளஞ்சிவாச்சாரியார்களை தோளில் தட்டிக் கொடுத்தும் வாஞ்சையோடு வாழ்த்தினார் முதல்வர். பிறகு அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.

கம்பீரக் கலைஞர், கண் கலங்கிய வேலு…

மறுபடியும் மக்கள் கடலில் நீந்த ஆரம்பித்த முதல்வரின் வாகனம் இரவு 8.30 மணியளவில்தான் அண்ணா நுழைவாயில், கலைஞர் சிலை திறப்பு நிகழ்விடத்துக்கு வரமுடிந்தது.

அங்கே கம்பீரமாக நின்ற கலைஞர் சிலையையும், அதன் அருகே எழுப்பப்பட்ட அண்ணா நுழைவாயிலையும் ஆர்வத்தோடு பார்த்தார் முதல்வர். கலைஞரைப் பற்றி சில நிமிடங்கள் பேசினாலே கண் கலங்கிவிடும் இயல்புகொண்ட அமைச்சர் எ.வ. வேலு, தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கலைஞர் சிலையை முதல்வரோடு சேர்ந்து பார்க்கும்போது மேலும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டார்.

அண்ணா நுழைவாயிலையும், கலைஞர் சிலையையும் திறந்து வைத்த முதல்வர் சுற்றிலும் திரண்ட கூட்டத்தைப் பார்த்து திகைத்துக் கொண்டிருந்தார். சிலை திறப்பு மேடையில் இருந்து இறங்கி கொஞ்ச தூரம் நடந்துதான் பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல வேண்டும். அப்படியே இறங்கி மக்களைப் பார்த்து கையசைத்தபடியே பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தண்டராம்பட்டு சகோதரியின் வாழ்த்து

மேடையில் முதலில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “பல்வேறு பணிகள் இருந்தாலும் அவற்றை சற்று தள்ளி வைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் முதல்வருக்கு என் நன்றிகள். அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு இங்கே வரும்போது இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று நம் முதல்வரை வரவேற்றனர். என் நெஞ்சில் என்ன நிழலாடிக் கொண்டிருக்கிறது என்றால், தண்டராம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி, ‘ நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்… நூறாண்டு வாழ வேண்டும்’ என்று நம் முதல்வரை வாழ்த்தினார்.அதுதான் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வாழ்கிற காலம்தான் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்” என்று நெகிழ்ந்து போய் பேசினார் அமைச்சர் எ.வ.வேலு.

அதுமட்டுமல்ல ஸ்டாலின் உரை நிகழ்த்துவதற்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை ஸ்டாலின் மூலம் வழங்கச் செய்தார் வேலு. கலைஞர் சிலை திறக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்வுக்குக் காரணமும் சொன்னார் வேலு.

பொதுக்கூட்டம் மன்னிக்கவும் மாநாடு…

அதன் பின் இந்த பிரம்மாண்டக் கூட்டத்தில் பேசத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், ”இந்த பொதுக்கூட்டத்தின் மன்னிக்கவும் இந்த மாநாட்டினுடைய தலைவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் எதிலும் வல்லவரான எ.வ. வேலு அவர்களே..” என்று தொடங்கினார்.

“பொதுவாக திருவண்ணாமலைக்கு வருபவர்கள் கிரிவல பாதையை சுற்றி வருவார்கள். ஆனால் இன்று நான் திருவண்ணாமலையை சுற்றி வரும் சூழலை எ.வ. வேலு உருவாக்கி வைத்திருக்கிறார். மலை உச்சியில்தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால் இன்று திருவண்ணாமலை நகரம் முழுதும் ஒளிமயமாக காட்சி அளிக்கிறது. மாநாடு போல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் திருப்பத்தூர், கரூர் மாவட்டத்தில் மக்கள் கடலை பார்த்தேன். அதையெல்லாம் தாண்டி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் என்னையே திக்குமுக்காட வைத்திருக்கிறார் நம்முடைய வேலு.

கழகத்தின் விழா வேந்தர் என்றால் அது வேலுதான். அவரை பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்து பணியாற்றுங்கள் என்று சொன்னாலும்… கழகத்தைப் பொறுத்தவரை அவரிடம் பல்வேறு துறைகள் இருக்கின்றன.

வேலுவிடம் இருக்கும் துறைகள்

சிலைகள் துறை, மணிமண்டபங்கள் துறை, விழாக்கள் துறை, சிறப்பு மலர்கள் தயாரிக்கும் துறை, புத்தகங்கள் அச்சடிக்கிற துறை, நினைவுப் பரிசுகள் தயாரிக்கும் துறை என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் என்று நான் சொல்வது புகழ்வதற்காக அல்ல, அவரது இயல்பே அப்படித்தான்.

அவரிடம் ஒரு செயலை கொடுத்தால் அதன் பிறகு அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அந்த நாளில் மேடைக்கு வந்தால் போதும். இந்த ஆற்றல் எல்லாருக்கும் வாய்க்காது. ஆற்றல் வாய்த்தவர் கூட அதே ஆர்வத்தோடு வேலை பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆற்றலும், ஆர்வமும் கொண்ட வேலுவின் முயற்சியால்தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலைஞர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஊரெல்லாம் திறந்து வைத்துவிட்டு இப்போது தன் ஊரிலே திருவண்ணாமலையிலே கலைஞர் சிலையை உருவாக்கி என்னை அழைத்து வந்திருக்கிறார். அதனால் அவருக்கு என் இதயபூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்வதாக நினைக்கிறேன். அதேநேரம் வெளிப்படையாக பாராட்டுவது என் கடமை என்பதால் பாராட்டுகிறேன்” என்று வேலுவை விழாவேந்தர் என்று பாராட்டிய ஸ்டாலின் தொடர்ந்து பேசினார்.

முதன் முதலில் வெற்றிச் சூத்திரம் கற்பித்த ஊர்

“முதன் முதலில் கழகம் ஆட்சி அமைக்க வெற்றிச் சூத்திரம் கற்பித்த ஊர் திருவண்ணாமலை. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பயணத்தை திருவண்ணாமலையில் இருந்துதான் தொடங்கினேன். உங்களின் எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று சொன்னேன். லட்சக்கணக்கான மனுக்களைக் கொடுத்தீர்கள். அந்த பயணமே வெற்றியின் அடித்தளம். மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக திமுக அரசு அமையும். உங்களின் கவலைகள் தீரும் என்று திருவண்ணாமலையில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு சொன்னேன்.

இந்த ஓராண்டில் மக்கள் விரும்பும் அரசாக மக்கள் கவலையைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசாக நடத்தி வருகிறேன். என் கடமையை சரியாக செய்து வருகிறேன் என்று கம்பீரத்தோடு சொல்வதற்காக இங்கே வந்திருக்கிறேன். எங்களுக்கு இரு எஜமானர்கள் மனசாட்சி, மக்கள் என்று அண்ணா சொன்னார். அதன்படியே நாமும் செயல்பட்டு வருகிறோம்.

எந்த நம்பிக்கையோடு திமுக அரசுக்கு வாக்களித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்போம் என்று அண்ணா மீது ஆணையிட்டு கலைஞர் மீது ஆணையிட்டு உறுதிகூறுகிறேன்” என்று தன் உரையை நிறைவு செய்தார் ஸ்டாலின்.

அதன் பின் மறக்காமல் கலைஞர் சிலை வடித்த சிற்பிக்கு தங்கச் சங்கிலியை முதல்வரின் கைகளால் அணிவித்து மகிழ்ந்தார் வேலு.

கூட்டம் முடிந்து அருணை விருந்தினர் மாளிகைக்குத் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக வரலாற்றிலும் தலைவர் கலைஞரின் வாழ்க்கையிலும் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவுவாயிலையும் கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தேன்! அரசியல் நிகழ்ச்சிக்குத் திருவண்ணாமலை இதுவரை காணாத மக்கள் திரள் இதுவென, கூடியிருந்த மக்களில் சிலரே என்னிடம் கூறினர்.

கழகப் பற்றுக் கொண்டு திரண்ட உடன்பிறப்புகளும் – என்மேல் பாசம் கொண்ட மக்களும் பாதுகாப்பாகத் தங்களது இல்லங்களுக்குத் திரும்ப வேண்டுகிறேன். தமிழுக்கும் தமிழினத்துக்கும் காவலரணான கழகத்தைக் கட்டியெழுப்பிய அண்ணா – கலைஞர் காட்டிய பாதையில் நடைபோடுவோம்!” என்று இரவு 10.40க்கு பதிவிட்டிருக்கிறார்.

நேற்று இரவு திருவண்ணாமலையிலேயே தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *