திருச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 23) காலையில் தஞ்சையில் நடந்து சென்று மக்களிடம் நேரடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் நேற்று இரவு தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இன்று மாலை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொரடாச்சேரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்கிடையே இன்று காலையில் இரவு தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது காமராஜர் மார்க்கெட்டில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தஞ்சை சத்யா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் கீழராஜ வீதியில் சென்றபோது அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் குடித்தார்.
காலையிலேயே முதல்வர் ஸ்டாலினை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து இன்று இரவு சென்னை திரும்பும் ஸ்டாலின், வரும் 25ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியிலும், 26ம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்திலும், 27ம் தேதி தென்காசி மற்றும் விருதுநகரிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாஸ்கோ பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி… பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!
வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!