சிறப்பு சட்டமன்ற கூட்டம்: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர்!

அரசியல்

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று (நவம்பர் 18) கூடிய தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார்.

இதனை எதிர்த்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

அந்த மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக ஆளுநருக்கு அனுப்புவதற்காக ஏற்கெனவே அறிவித்தபடி தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

அவை கூடியதும் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது சட்டமன்றத்தில் அவர் பேசுகையில், “இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலமான தமிழ்நாட்டில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.

மத்திய அரசின் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்கிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டு திட்டங்கள் இந்தியாவுக்கு வழிகாட்டும் திட்டங்களாக அமைந்துள்ளன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்குவதை தடுக்க மத்திய அரசின் இடையூறுகள் உள்ளன.

குறிப்பாக பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பிரச்னைகளை உருவாக்கி வருகிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டு தெளிவடையலாம். ஆனால் ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.

ஆளுநருக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உள்ள பிரச்சனையானது, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மட்டுமல்ல, சமூகநீதியாகவும் உள்ளது. அதனால் தான் முடிந்தவரை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

தமிழ்நாடு வளர்ந்திருப்பதை ஆளுநர் பொறுக்க முடியாமல் தான் இது போன்று செய்வதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். அரசியல் சட்டத்திற்கு மாறாக ஆளுநர் அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

எனவே அவருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டுமென்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

ஆனால், இதில் எந்த முயற்சிகளும் பலன் தராத காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களை கவனித்து கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு தெரிவித்த கருத்துகள் நமது சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆளுநர் கடந்த 13 ஆம் தேதி 10 மசோதக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

தற்போது இந்த 10 சட்ட முன்முடிவுகளும் சட்டப்பேரவையில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டியதுதான். அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை அடங்கி இருக்க வேண்டியது தான் மக்களாட்சி தத்துவத்திற்கான மரபாகும்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் தலையில் உச்சநீதிமன்றம் ஒரு குட்டுவைத்துள்ளது.

அதனையடுத்து அவசர அவசரமாக எந்த காரணமும் குறிப்பிடாமல் ஆளுநர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அதன்படி அவசர, அவசியம் கருதியே இந்த சிறப்பு சட்டமன்றம் கூடியுள்ளது. இந்தநிலையில் தற்போது அவையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாக்களை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Bigg boss 7 Day 47: வீட்டின் முடிவை எதிர்த்து போராடும் விசித்ரா – அர்ச்சனா!

தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *