பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 10) செல்கிறார்.
தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை நேற்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு சென்னை திரும்பினார். அதனைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு செல்கிறார்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்திற்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் 3 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் பயணம்:
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தனி விமானம் மூலம் சேலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு வருகிறார்.
மாலை 6 மணிக்கு சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு மற்றும் மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டம் முடிந்ததும் கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஓய்வு மாளிகையில் தங்குகிறார்.
இரண்டாம் நாள் பயணம்:
தொடர்ந்து நாளை (ஜூன் 11) காலை 8 மணிக்கு அரசு ஓய்வு மாளிகையில் இருந்து புறப்பட்டு செரி ரோடு, அம்பேத்கார் சிலை, தமிழ் சங்கம் வழியாக அறிஞர் அண்ணா பூங்கா வருகிறார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, மறுசீரமைக்கப்பட்ட போஸ் மைதானம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் காலை 10 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்குகிறார்.
பின்னர் அன்று மாலை மேட்டூர் செல்லும் முதல்வர், இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார்.
மூன்றாம் நாள் பயணம்:
நாளை மறுதினம் (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீரை திறந்துவிடுகிறார். பின்னர் தனி விமானத்தில் சென்னைக்கு திரும்புகிறார்.
முதல்வரின் 3 நாள் சுற்றுப் பயணத்தையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முதல்வரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் சேலம் மாவட்ட திமுகவினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டம்?
’நாயகன் மீண்டும் வரார்’: ரீ ரிலிஸாகும் வேட்டையாடு விளையாடு!
