டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய மக்களுக்கும், தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு அளித்து அனைத்து கட்சிகளுக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 26) பேசினார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதற்கு எதிராக தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதனை அப்பகுதி மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அரிட்டாப்பட்டிக்கு வந்த ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களுக்கு தான் எனது முதல் பாராட்டு!
தொடர்ந்து வல்லாளப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு இந்த திராவிட மாடல் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று 30க்கும் மேற்பட்ட ஊர் பெரியவர்கள் என்னை வந்து சந்தித்து நன்றி தெரிவித்தனர். எனக்கு பாராட்டு விழா நடத்துவதாகவும் கூறினர்.
அவர்களிடம், ’எனக்கு எதற்கு பாராட்டு விழா, எனது கடமையை தான் செய்தேன்’ என தெரிவித்தேன். எனினும் அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று இன்று இங்கு வந்துள்ளேன்.
இந்த பாராட்டு விழா எனக்கானது இல்லை, உரிமைக்காக உறுதியாக போராடிய உங்களுக்கான வெற்றி. போராடிய உங்களுக்கு தான் எனது முதல் பாராட்டு. உங்கள் மகிழ்ச்சியில் பங்குபெற நான் இங்கு வந்திருக்கிறேன்.
இன்றைய பாஜக மத்திய அரசு மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இன்றும் டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஏற்கெனவே கிட்டத்தட்ட 2 வருடம் நடந்தது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் டங்ஸ்டனுக்கு எதிராக போராட்டம் நடத்தி மூன்றே மாதங்களில் மக்களாகிய நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் முன் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இது மக்கள் மற்றும் அரசு எதிர்ப்பின் காரணமாக கிடைத்த வெற்றி.
மாநில அரசின் அனுமதி இல்லாமல் முக்கிய கனிம வளங்கள் ஏலம் விடலாம் என மத்திய பாஜக அரசு சட்டம் கொண்டு வந்தது. அன்றைக்கு அந்த மசோதாவை திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அதிமுக எம்.பி.தம்பிதுரை வரவேற்று ஆதரித்து பேசினார். இதுதான் டங்ஸ்டன் சுரங்க பிரச்சனையின் தொடக்க புள்ளியாக இருந்தது.

அப்போதே மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் அரசு சார்பில் பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். அன்றைய தினமே டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு அவசர கடிதம் எழுதினேன்.
ஏன் அந்த வார்த்தையை சொன்னீர்கள்?
இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. அப்போது நான் மிக தெளிவாக சொன்னேன். ’நான் இருக்கிற வரையில் மக்களால் நிச்சயமாக டங்ஸ்டன் திட்டம் வராது. அப்படி ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், நான் பதவியில் இருக்கமாட்டேன்’ என்று திட்டவட்டமாக சொன்னேன்.
அதற்கு ’ஏன் அந்த வார்த்தையை சொன்னீர்கள்? அது அவசியம் இல்லையே‘ என அமைச்சர்கள் கேட்டார்கள். ’பதவியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மக்களின் பிரச்சனை பற்றித்தான் கவலை’ என தெளிவாக எடுத்துச் சொன்னேன்.
மக்களின் போராட்டத்தையும், சட்டமன்ற தீர்மானத்தையும் மதித்து மத்திய அரசு தற்போது இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

தீர்மானம் நிறைவேற்றும்போது அதனை சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக மக்களாகிய உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் ஆட்சி பொறுப்பு ஏற்றப்போது ’இது என்னுடைய அரசு கிடையாது. உங்களுடைய ஆட்சி’ என்று கூறினேன். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். இது உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை மனதில் வைத்துக் கொண்டு என்றைக்குக்கும் நீங்கள் ஆதரவு தாருங்கள். உங்களுக்குப் பக்கபலமாக என்றைக்கும் நாங்கள் இருப்போம்” இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.