கலைஞர் கோட்டம்: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்கிய ஸ்டாலின்
கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மேடையில் முதல்வர் ஸ்டாலின் மறக்கமுடியாத பரிசை வழங்கி சிறப்பித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜுன் 20) திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் நிறைவுரையாற்ற ஒலிபெருக்கி அருகே வந்தார்.
அனைவரும் அவரது பேச்சைக் கேட்க ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கையில், மைக் அருகே வந்து நின்ற முதல்வர், ’முக்கிய அறிவிப்பு’ என்று கூறினார்.
அனைவரும் என்ன விஷயம் என்று ஆர்வமாக பார்த்த நிலையில், “கலைஞர் கோட்டம் உருவாகுவதற்கும், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால் அவருக்கு பொன்னாடையும், போர்த்தவில்லை, நினைவு பரிசும் வழங்கவில்லை.
அதனை அவர் வேண்டாமென்று தவிர்த்துள்ளார். அவர் வேண்டாமென்று சொன்னாலும், எனக்கு வழங்கப்பட்டிருக்க கூடிய நினைவு பரிசை அவருக்கு வழங்கி நான் அவருக்கு நன்றி கூற ஆசைப்படுகிறேன்” என்று கூற அனைவருக்கும் நெகிழ்ச்சி.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் திகைத்த அமைச்சர் எ.வ.வேலு மேடையில் பின் வரிசையில் இருந்து எழுந்து முதலமைச்சர் அருகே சென்றார்.
தனக்கு வழங்கப்பட்ட கலைஞர் கோட்ட நினைவுப் பரிசையும், பொன்னாடையையும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வழங்கினார் ஸ்டாலின்.
தயாளு அம்மாள் அறக்கட்டளையின் பொறுப்பில் கட்டப்பட்ட இந்த கலைஞர் கோட்டத்தை அடிக்கடி திருவாரூர் சென்று பார்த்து, ஒவ்வொரு கட்டமாய் அதன் முன்னேற்றத்தை பற்றி ஸ்டாலினுக்கு அங்கிருந்தே தகவல்கள் சொல்லி… கலைஞர் கோட்டத்தின் முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் அமைச்சர் எ.வ. வேலு. ஆனால் இதற்கான நினைவுப் பரிசையும் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விழாவிலும் கூட நேரடியாக ஸ்டாலின் சொல்லியும் மறுத்துவிட்டார் வேலு.
அதனால்தான்… எல்லார் முன்னிலையிலும் ஒலிபெருக்கியில் அழைத்தால் வேலுவால் மறுக்க முடியாது என்றுதான் முதல்வர் இவ்வாறு அழைத்து, வேலுவை கௌரவித்தார் என்கிறார்கள் விழாவில் கலந்து கொண்ட திமுக சீனியர்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா
’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்
செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!