நேற்று முழுவதும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) பேசியுள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் இல்லம், அவரது மகன் கெளதம சிகாமணியின் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை 13 மணி நேரம் சோதனை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தனி அறையில் அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு திரும்பினார் பொன்முடி.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ரகுபதி, எம்.பி. ஆ.ராசா, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று காலையில் அமைச்சர் பொன்முடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தற்போது தொலைபேசி வாயிலாக பொன்முடியை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, அமலாக்கத்துறையின் விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்வர், இந்த விவகாரத்தை துணிச்சலுடன் சட்டரீதியாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல்களை எதிர்த்து நின்று, தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பொன்முடிக்கு உறுதியளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு!