வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!

Published On:

| By christopher

mkstalin sent letter to pm modi

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ளப்பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள இந்த கடிதம் தொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வரின் கடிதத்தை வழங்க உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி: அமைச்சர் வேண்டுகோள்!

ரூ.1000 குறைந்த தங்கம் விலை: காரணம் என்ன?

Comments are closed.