சென்னிமலை… சிவன்மலை… எரிமலை!: தீரன் சின்னமலைக்கு முதல்வர் மரியாதை!

அரசியல்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3) மரியாதை செலுத்தினார்.

1800ன் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போர் செய்து வெற்றி பெற்றவர் தீரன் சின்னமலை.

எனினும் தங்களுக்கு பழக்கப்பட்ட சூழ்ச்சி மூலம் சின்னமலையை கைது செய்து 1805 ஆம் ஆண்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.

சுதந்திரத்திற்காக தீரத்துடன் போராடிய தீரன் சின்னமலையின்  வீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அவர் உருவச்சிலையும்,  சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுத்தூணும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது.

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், ”சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்!

கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0