தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக இன்று (மே 23) முதல் 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்வதை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு அரசு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன் மூலமாக ரூ.6,100 கோடி முதலீடும், 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு அவர் சிங்கப்பூர் புறப்படுகிறார். அங்கு 2 நாட்கள் நடைபெறவுள்ள தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
அங்கிருந்து மே 25ஆம்தேதி ஜப்பான் செல்லும் முதல்வர், 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் 31ஆம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தொழில்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஆர்.பி ராஜா கடந்த 21ம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர், ஜப்பான் செல்வதை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நம்பர் 1: இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா
2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்!