பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் 7,740 புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்கியுள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தனது ஆட்சிக்காலத்தில் ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ’கல்வி வளர்ச்சி நாள்’ ஆக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை நங்கநல்லூரில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மேயர் பிரியா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் கல்வி உதவிதொகை ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு முதல்வர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடையாளமாக ’பெரியார் அன்றும் இன்றும்’ புத்தகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! : அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
இரவு பாடசாலை திட்டம்: விஜய்யின் முடிவை வரவேற்ற அன்பில் மகேஷ்