’அந்த 4 ஆயிரம் கோடி என்னாச்சு?’: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்!

அரசியல்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அந்த ரூ.4000 கோடிக்கு பணி செய்த காரணத்தினால்தான் 47 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை பெய்தும் சென்னை தப்பித்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிசம்பர் 5) ஆய்வு செய்தார்.

வெள்ளத் தாக்கம் குறைந்திருக்கிறது!

பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “சென்னையில் வரலாறு காணாத வகையில் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

2021ஆம் ஆண்டு நவம்பரில் பெருமழை பெயதது. அப்போது தேங்கிய மழைநீரை கணக்கில் கொண்டு கட்டமைப்புகளை மேம்படுத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் திட்டமிட்டோம். அதன்படி சுமார் ரூ.4000 கோடி மதிப்புள்ள மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். அதனால்தான் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது பெருமளவு குறைந்திருக்கிறது.

அப்போது 199; இப்போது 7!

உதாரணமாக, 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளத்தை நாம் மறந்திருக்க முடியாது. அப்போது மீனம்பாக்கத்தில் 24 மணி நேரத்தில் 34.5 செமீ மழை பெய்தது. ஆனால் இப்போது 36 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில்43 செமீ, பெருங்குடியில் 44 செ.மீ மழையும் பெய்துள்ளது. இது மிக மிக அதிகமாகும்.

எனினும் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டது. சொல்லப் போனால், 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் இன்று அதை விட அதிக மழை பெய்த போதிலும் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

தற்போது 9 மாவட்டங்களில் 61 ஆயிரத்து 666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 11 லட்சம் உணவு பொட்டலங்கள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை  முகத்துவாரங்களில் புயல் தாக்கம் காரணமாக நதிகளில் இருந்து செல்லும் வெள்ள நீர் மெல்ல வடிந்து வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் வருகை!

2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கத்திலிருந்து திட்டமிடப்படாமல் திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அது ஒரு செயற்கை வெள்ளம். இது இயற்கை வெள்ளம். ஆனால் இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடலுடன் முன்கூட்டியே திறந்துவிட்டதால் இத்தகைய பெருமழையை சமாளித்துள்ளோம்.

பெருமழை பெய்த போதும் திட்டமிடலுடன் 8000 கன அடி நீர் மட்டுமே செம்பரப்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் பெருவெள்ளம் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்று மழை நிற்பதற்கு முன்பே தமிழகத்தின் அனைத்து மாநகராட்சியிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னை வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை, தாம்பரம், ஆவடி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

பல பகுதிகளில் இயல்புநிலை மீண்டும் தொடங்கியிருக்கிறது. 14 அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

எடப்பாடிக்கு பதில்!

ரூ.4000 கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனாலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அந்த ரூ.4000 கோடிக்கு பணி செய்த காரணத்தினால்தான் 47 ஆண்டுகள் இல்லாத, வரலாறு காணாத மழை பெய்தும் சென்னை தப்பித்தித்திருக்கிறது. அவர்கள் ஆட்சிகாலத்தில் இதை எதையும் செய்யவில்லை.

வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.5000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டி மத்திய அரசுக்கு இன்று கடிதம் எழுத இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களும் இதைப் பேச இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை”: விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

+1
0
+1
3
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *