முதல்வர் மு.க.ஸ்டாலினை சுற்றியுள்ள அவருடைய நலம் விரும்பிகள் கடந்த சில மாதங்களாக சொல்லி வரும் தகவல் இதுதான்.
அதாவது ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கட்சி மீண்டும் ஆட்சி அமைக்காது. திமுகவின் ஆதரவோடு இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய நாட்டின் துணை பிரதமராக ஆவார்’ என்று கூட்டல் கழித்தல் கணக்குகளை வைத்து சொல்லி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஈ டிவி பாரத் செய்தித்தளத்திற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் சொல்லியிருக்கும் தகவல் முக்கியமானது.
’திமுக இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன.
பிரதமராகும் லட்சியம் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?’ என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில்,
“தேசிய அரசியலில் தி.மு.க. ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையை கடந்த 4௦ ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது.
வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் தி.மு.க.வின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் தலைவர் கலைஞர்.
நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக உரிமைக்குரலை முன்னெடுத்து வட இந்திய அரசியல் தலைவர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் முதுகெலும்பாக இருந்தது தி.மு.கழகம். அதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு வழங்க வித்திட்டு, அணையா விளக்கான “சமூக நீதி”யை இந்தியா முழுமைக்கும் ஏற்றி வைத்தது.
தி.மு.க. இருக்கும் இடத்தில் மத வாதம் இருக்காது என்ற பாராட்டைப் பெறும் விதத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, இந்தியாவில் கூட்டணி அரசு தன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு உறுதுணையாக நின்று, ஒன்றியத்தில் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது கலைஞரின் தி.மு.கழகம்தான்.
இரண்டு முறை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் தி.மு.க. முதன்மையாக இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன.
தலைவர் கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது.
என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பசும்பொன்னில் ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்
லியோ வெற்றிவிழா: நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!