வேந்தர் நியமன தீர்மானம்: பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு… முதல்வர் பதில்!

Published On:

| By christopher

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று (நவம்பர் 18) கூடிய தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.

அதனைத்தொடர்ந்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ  நயினார் நாகேந்திரன் பேசுகையில், “சபாநாயகர் கூறியதை தாண்டியும் ஆளுநரை சட்டமன்றத்தில் விமர்சிக்கப்படுகிறார்” என்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “பல்கலை. வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநருக்கு அதிகாரம் வேண்டுமென்று 1998ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருக்கும்போது இதே அவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று வேந்தரை முதலமைச்சரே நியமனம் செய்யவேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளோம். என்னை பொறுத்தமட்டில் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்றார்.

இப்போது அப்படியல்ல!

அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், “அப்போதெல்லாம் வேந்தர், துணைவேந்தர் எல்லாம் அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து அதன்பின்னர் நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படியல்ல. அதனால் தான் இப்போது எதிர்க்கிறோம். தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்” என்று கூறினார்.

பிரதமரே வேந்தராக உள்ளார் தெரியுமா?

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “மேற்குவங்கத்தின் மத்திய பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பதவியை இந்திய நாட்டின் பிரதமர் மோடி வகித்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் அவரது சொந்த மாநிலத்தில் கூட அல்ல,  மேற்குவங்க பல்கலைக்கு வேந்தராக இருக்கிறார். அதற்கு வழிவகுக்கிற சட்டம், இதற்கு வழிவகுக்காதா?

குஜராத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அந்த மாநிலத்தின் முதல்வர் தான் வேந்தராக உள்ளார்.

அதேபோன்று கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் எல்லாம் அரசு யாரை துணைவேந்தரகளாக பரிந்துரைக்கிறதோ, அவரை தான் ஆளுநர் நியமிக்க வேண்டும் என்ற சட்டங்கள் உள்ளன.

அதன் அடிப்படையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளபடியும், தமிழ்நாடு அரசு இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் அனைத்து பல்கலைக்கழக வேந்தராக இருந்தால் தான், இங்கு எல்லாம் சரியாக நடைபெறும்.

புதிய கல்விக்கொள்கையில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புக்கெல்லாம் நுழைவுத்தேர்வு வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டித்து முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே கருத்து சொல்லிவிட்டார்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் ஆன்லைன் கேம் குறித்து பேசியதற்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீதிமன்றம் கூறியுள்ளதை தெளிவுபடுத்தி பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த 10 தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி பாஜக வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்து வெளியேறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சிறப்பு சட்டமன்ற கூட்டம்: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர்!

ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை: வேல்முருகன்

மீண்டும் வருகிறான் ஆளவந்தான்: 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment