ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று பிப்ரவரி 3 மாலையோடு முடிவடைகிறது. mkstalin plan to arrest seeman
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், இந்த இடைத்தேர்தலில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே முக்கிய போட்டியாளர்களாக களத்தில் இருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என திமுகவைச் சேர்ந்த பலரும் திரண்டு வந்து தொகுதியை பங்கிட்டு கொண்டு இடைத்தேர்தல் வேலை பார்த்தனர்.
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டதால் திமுக வழக்கமான இடைத்தேர்தல் ஃபார்முலாவை இந்த இடைத்தேர்தலில் பின்பற்றவில்லை.

ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி மட்டுமே தேர்தல் பணிகளை கவனித்து வந்தார். அவ்வப்போது அமைச்சர்கள் நேரு, வேலு, செந்தில் பாலாஜி மற்றும் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஈரோட்டுக்கு வந்து சென்றனர்.
திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியில் இருப்பதால்… இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அவர் மட்டுமல்ல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவது பிரச்சாரத்துக்கு வருவார் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் சீமானுக்கு எதிராக தேர்தல் வேலை பார்க்க மாவட்ட அமைச்சர் முத்துசாமி போதும் என்று கருதி உதயநிதியும் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை.
அதேநேரம் கடந்த பத்து நாட்களாக ஈரோட்டிலேயே முகாமிட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தினமும் இரவு பொதுக்கூட்டம் போட்டு பெரியாரையும் திமுக அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தார்.
பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு பெரியார் நகரிலேயே பொதுக்கூட்டம் போட்டு பெரியாரைக் கடுமையாக விமர்சித்தார் சீமான்.

இந்த இடைத்தேர்தலில் திமுக தனது பிரச்சார உத்தியை முற்றிலுமாக மாற்றிவிட்டது. மாவட்ட அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்பி பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் வி.சி. சந்திரகுமாரோடு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு 34 வார்டுகளிலும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துள்ளனர். திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தைத் தவிர பெரிய அளவில் பொதுக்கூட்டங்களை கூட ஏற்பாடு செய்யவில்லை.
இதே நேரம் ஈரோட்டுக்கு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக தாக்கிய நிலையில்… திமுக இதற்கு அரசியல் ரீதியாக எந்த பதிலும் தேர்தல் களத்தில் கூறவில்லை.
இந்த சூழலில் பெரியாரிய கூட்டமைப்பை சேர்ந்த விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெண்ணிலா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கால்குலேட்டர் சின்னத்தை பெற்றார்.

அவருக்குப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற வகையில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க திருமுருகன் ஆகியோர் முழுக்க முழுக்க சீமானுக்கு எதிராக பதிலளிக்கும் களமாக ஈரோடு கிழக்கு பிரச்சார களத்தை பயன்படுத்திக் கொண்டனர். இந்த வகையில் தான் நேற்று பிப்ரவரி இரண்டாம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் நோட்டீஸ் விநியோகப்பதில் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாகவும் மாறியது. போலீஸ் தலையிட்டு இரு தரப்பினரையும் அந்த இடத்திலிருந்து அகற்றியது.
இப்படி கருத்தியல் ரீதியாகவும் களரீதியாகவும் சீமானுக்கு எதிராக பெரியார் உணர்வாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பயன்படுத்திக்கொண்டனர்.
அதே நேரம் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் திமுக, சீமான் விவகாரத்தில் இந்த அளவு பொறுமை காப்பது ஏன் என்றும் அவர்கள் வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, “அவர்களின் அவசரம் எங்களுக்கு புரிகிறது. ஆனால் சீமானுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் ரீதியான கடுமையான அடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சில வியூகங்களை திமுக வகுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமானுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது என்பதுதான் தேர்தல் களத்தில் திமுகவின் வியூகம்.
சீமானை எதிர்த்து போராட்டம் செய்வது பிரச்சனை செய்வது ஆகியவற்றால் இடைத்தேர்தல் களத்தில் சீமான் எதிர்பார்ப்பது தான் நடக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது.
அதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த ஒரு சில நாட்களில் அனேகமாக பிப்ரவரி 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை சீமான் கைது செய்யப்படலாம். அவர் மீது ஏற்கனவே தமிழகம் முழுவதும் வழக்குகள் இருக்கின்றன. பற்றாக்குறைக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்திலும் நீங்கள் வெங்காயம் வீசினால் நான் வெடிகுண்டு வீசுவேன் என்று அவர் பேசிய பேச்சுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் வைத்து சட்டரீதியான ஆலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது. சீமான் வெளியே இருக்கும் போதே ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் திமுகவுக்கு வந்துவிட்டனர். நீதிமன்றத்தில் ‘நிற்கும்’ வகையிலான வழக்கின் அடிப்படையில் சீமான் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு நாம் தமிழர் கட்சியை இந்த தேர்தலுக்குள் திமுக துடைத்து விட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் போட்டிருக்கும் கணக்கு. தேர்தல் முடியட்டும் பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்கள் திமுக தரப்பில்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.