அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!

Published On:

| By christopher

mkstalin permit to give patta

அடுத்த 6 மாதத்திற்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். mkstalin permit to give patta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் 18வது அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது.

அதன்பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில், “சென்னையைச் சுற்றியுள்ள 32 கி.மீ உட்பட்ட பகுதிகளிலும், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் 16 கி.மீ உட்பட்ட பகுதிகளிலும் உள்ள அரசாங்க நிலத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்கிறது பெல்ட் ஏரியா சட்டம்.

இந்த சூழலில் முதல்வர் கள ஆய்வு சென்ற மாவட்டங்களில் பொதுமக்கள் பலரும் பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை கருத்தில்கொண்டு பட்டா வழங்குவதில் தளர்வு கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதை புரட்சி என்று தான் சொல்லவேண்டும்.

அதன்படி, கடந்த 60 வருட காலமாக அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. சென்னையை சுற்றியுள்ள நான்கு மாநகராட்சிகளை சேர்த்து சுமார் 29 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுக்க வேண்டியுள்ளது. அதே போன்று மற்ற மாநகராட்சி பகுதியில் 50 ஆயிரம் என மொத்தம் 85,000 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடங்களில் நீண்ட காலம் ஒரு இடத்தில் வசிக்கிறார்கள் என்ற நிலையில் அவர்களுக்கு கருணையுடன் இந்த பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்திற்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா என, 2026 தேர்தலுக்குள் மொத்தம் 16 லட்சம் பேருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் – நகராட்சிகள் – மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share