கலைஞர் கோட்டம் திறப்பு விழா: உடன்பிறப்புகளை அழைத்த ஸ்டாலின்

Published On:

| By christopher

கலைஞரின் பெயரில் உருவாகியுள்ள கோட்ட திறப்புவிழாவில் உடன்பிறப்புகள் திரண்டிட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு இன்று (ஜூன் 18) எழுதியுள்ள அழைப்பு மடலில், ”முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஜூன் 7ஆம் நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட வடசென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உள்ளன்புடன் புகழ் வணக்கம் செலுத்தி, நாட்டைச் சீரழித்துவரும் ஜனநாயக விரோத – பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியேற்றார்கள்.

‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா நம் முத்தமிழறிஞர் கலைஞர். அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது கலைஞரின் நூற்றாண்டு.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

mkstalin open letter to dmk cadres

தேர் வடிவில் கலைஞர் கோட்டம்

தனது 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் – எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர் கலைஞர். அந்தத் திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை – என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

எதிலும் வல்லவர் என்று நான் பாராட்டிய அமைச்சர் எ.வ.வேலு இந்தப் பணிக்குப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விழா ஏற்பாடுகளை அருமையான வகையில் கவனித்து வருகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்று தான் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் இடையிலே, கோவையிலும் கலைஞரின் புகழ் போற்றி, கழகத்தின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது.

mkstalin open letter to dmk cadres

நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை உடன்பிறப்புகளாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவரின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்

தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரையாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அவரது திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்.

ஒவ்வொரு உடன்பிறப்பின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவர் கலைஞரின் பெயரில் உயர்ந்து நிற்கும் கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் – அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆதிபுருஷ் விமர்சனம்: வீடியோகேம் விளையாட்டான ராமாயணம்?

திமுக பேச்சாளர் கைது: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment