திமுகவின் உட்கட்சித் தேர்தல்களின் உச்சகட்டமாக அக்கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (அக்டோபர் 7) நடைபெறுகிறது.
தலைவர் பதவிக்காக அக்கட்சியின் இப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி இன்று பகல் 12 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் மறைவுக்குப் பின், கட்சியின் பொதுக்குழு கூடி அப்போது செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்தது.
எனினும் முதன் முறையாக உட்கட்சி அமைப்புத் தேர்தல் மூலம் ஸ்டாலின் இப்போதுதான் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்,
தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது ஆயிரம் சதவிகிதம் உறுதி என்றபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் பேசி தனக்கு ஆதரவு திரட்டியதை மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
இன்று பகல் 12 மணிக்கு ஸ்டாலின் தலைவர் பதவிக்கு மனு செய்வதற்கு முன்பாகவே மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டம் சார்பில் தலைவராக ஸ்டாலினை முன் மொழிந்து மனு தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர்,
திமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது மாவட்டம் சார்பில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன் மொழிந்து மனு தாக்கல் செய்கிறார்கள்.

அதில் முதல் மாவட்டமாக இன்று காலை 10 மணிக்கு அறிவாலயம் அமைந்திருக்கும் பகுதியை உள்ளடக்கிய சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர்,
மயிலை வேலு தனது மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தலைவராவதற்காக மனுவை அமைப்புச் செயலாளரிடம் கொடுத்தார்.
தொடர்ந்து பல மாசெக்களும் ஸ்டாலினுக்காக மனு தாக்கல் செய்கிறார்கள்.
–ஆரா