முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் பல்வேறு தகவல்களை கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 27) மாலை சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். அவருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டிவனம் நகருக்குள் சென்ற ஸ்டாலின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபம் வரை நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையே ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட ஆய்வு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தில், 7 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ஏக்கள் உட்பட 90 பேர் குவிந்திருந்தனர்.
முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மண்டபத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, அங்கிருந்த நிர்வாகிகளின் மினிட் நோட்களை பெற்று செக் செய்தார் அன்பகம் கலை. அதில் ஆய்வு கூட்டம் நடத்தியிருக்கிறார்களா, நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றார்களா உள்ளிட்ட விவரங்களை குறிப்பெடுத்து விட்டு, மினிட் நோட்டில் கையெழுத்திட்டு சீல் வைத்து மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தார்.
சரியாக 7 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

மேடையில் ஸ்டாலின் மற்றும் துரைமுருகனுக்கு மட்டும் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதற்கு வலதுபக்கம் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, மாசிலாமணி மற்றும் சேகர் ஆகியோருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது
மினிட் நோட் விவரங்களை அன்பகம் கலையிடம் இருந்து பெற்ற ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதனை வைத்து விரிவாக பேசினார்.
நாங்கள் பார்க்கமாட்டோம் என்று நினைக்காதீங்க!
குறிப்பாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைதேர்தலில் கிடைத்த வாக்குகளை ஒப்பிட்டு, அவற்றில் மோசமாக உள்ள 12 ஒன்றியங்களை குறிப்பிட்டு, அதனை சரி செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.
மேலும் நிர்வாகிகள் கூட்டங்களை சரிவர நடத்துவதில்லை, கட்சியின் புதிய அணிகளில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சரியாக செயல்படுவதில்லை, இதெல்லாம் நாங்கள் பார்க்கமாட்டோம் என்று நினைக்காதீர்கள் என கடிந்து கொண்ட ஸ்டாலின், அவர்களிடம் தலைமை சொல்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறினார்.

விழுப்புரம் நகரமும், வளவனூர் பேரூராட்சியும் நிர்வாகிகள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தியுள்ளனர். சிறப்பாக செயல்பட்ட தெற்கு மாவட்ட செயலாளருக்கு(கவுதம சிகாமணி) வாழ்த்து தெரிவித்தார்.
அதேவேளையில் செஞ்சி நகராட்சி சரியான முறையில் கூட்டம் நடத்தவில்லை என்றும், வடக்கு மாவட்ட செயலாளர் (சேகர்) இன்னும் சிறப்பாக தீவிர பணிகளில் ஈடுபட அறிவுறுத்தினார்.
இப்படி கையில் குறிப்பெடுத்து ஸ்டாலின் சொல்ல சொல்ல, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அவர் சொல்வதை உன்னிப்பாக கவனித்து தாங்கள் சிறப்பாக செயல்படுவதாக உறுதியளித்தனர்.
கூட்டம் முடிந்தபின்னர் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, அவர்களை தட்டிக்கொடுத்து, தோளில் கைப்போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடனடியாக அந்த புகைப்படங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் விழுப்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்த ஸ்டாலின், 21 சமூகநீதி போராளிகள் மணிமண்டம் மற்றும் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.