டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (ஆகஸ்டு 17) நேரில் சந்தித்து நீட் விலக்கு, காவிரி மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு டெல்லிக்கு சென்றார்.
விமானநிலையத்தில் திமுக எம்பிக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று காலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் அவருடன் திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர்!
இந்நிலையில், தற்போது பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் தமிழகத்துக்கான நீட் தேர்வு விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிலுவை, காவிரி விவகாரம், நதிகள் இணைப்பு திட்டம், மாநில நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இதுவரை 2 முறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி உள்ளார்.
இந்நிலையில் தற்போது 3வது முறையாக டெல்லி சென்று பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமரை சந்திக்கும் முதல்வர்: தமிழகத்தின் கோரிக்கைகள் என்னென்ன?