உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு அவர் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நேற்றும், இன்றும் (ஜனவரி 7,8) இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெறப்பட்ட முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ”உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 28 ஆம் தேதி ஸ்பெயின் செல்ல இருக்கிறார். அதனைத்தொடர்ந்து இந்தாண்டில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் முதல்வர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து ஏற்கெனவே கடந்த 5ஆம் தேதி நமது மின்னம்பலம் தளத்தில் “டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதலீட்டாளர் மாநாடு… எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?: ஸ்டாலின் விளக்கம்!
மொத்தமாக 1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்திய நிறுவனம்?