டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்! – ஸ்டாலின் கோவை விசிட் ஹாட்!  

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், கோவை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் விசிட் பற்றி  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வெளியிட்ட பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மெசஞ்சரில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “ஆகஸ்டு 23 இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்படுகிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.  இன்று இரவு கோவையில்  தங்கும் முதல்வர் ஸ்டாலின்  ஆகஸ்டு 24, 25, 26 தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு 26 ஆம் தேதி  சென்னை திரும்புகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வாஷ் அவுட் ஆன மாவட்டம் கோவை. இங்கிருக்கும் பத்து தொகுதிகளிலும் அதிமுக அணியே வென்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இதனாலேயே கோவை மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின், இந்த வகையில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து, அந்த மாவட்டத்தில் திமுகவை வெற்றி திசையில் செலுத்த வேண்டிய பொறுப்பை ஒப்படைத்தார்.

அதிமுகவின் வேலுமணியை எதிர்த்து அவருக்கு இணையாக செயல்படுவதற்கு செந்தில்பாலாஜிதான் சரிப்பட்டு வருவார் என்று கருதி அவரை நியமித்தார் ஸ்டாலின். ஏற்கனவே 2021 நவம்பர், 2022 மே என கோவைக்குச் என்ற ஸ்டாலின் மீண்டும் இன்று புறப்படுகிறார்.

கோவையில் நாளை ரூ. 663 கோடி மதிப்பளவில் 748 புதிய திட்டங்களை துவக்கி வைக்கும் விழா, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொள்ளாச்சியில் 5000 மாற்றுக் கட்சியினர் இணையும் விழா என அரசு விழாக்களும், அரசியல் விழாக்களும் கலந்த பயணமாக நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருக்கிறது.

mkstalin kovai visit

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க இதற்கு முந்தைய ஏற்பாடுகளை விட பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார் பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி.

கோவை மாநகரத்தின் மேம்பாலங்களுக்கு கீழே இருக்கும் பில்லர்களை எல்லாம் முழுதாக மூடும்படியான பிரம்மாண்டமான போஸ்டர்கள் கோவையையே திகைக்க வைத்திருக்கின்றன. ஸ்டாலின் படங்களும், செந்தில்பாலாஜி படங்களும் இந்த போஸ்டர்களில் பிரதானமாக இருக்கின்றன.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினோடும், ஸ்டாலின் குடும்பத்தினரோடும் நல்ல நெருக்கத்தோடு இருக்கும் செந்தில்பாலாஜி அந்த நெருக்கத்தை மேலும் இந்த பயணத்தின்போது அதிகப்படுத்திக் கொள்வார் என்பது இப்போதே தெரிகிறது.

முதல்வரோடு நெருக்கமாக இருப்பது சரி…. அவர் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கோவை மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகளுடன்  அமைச்சர் செந்தில்பாலாஜி நெருக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி கோவை மண்டலத்தில் குமுறலாகவே ஒலிக்கிறது.

கோவை வரும் நேரம் முதல்வரிடம் செந்தில்பாலாஜியை பற்றி நேரடியாக  கூற முடியாமல் தலைமைக் கழகத்தில் பலரையும் பிடித்து  தங்கள் நிலைமையை முதல்வரிடம் தெரியப்படுத்தும்படி கோவை மாசெக்கள் குமுறிவிட்டார்கள்.

mkstalin kovai visit


இப்போது கோவை மாவட்ட திமுக ஐந்து மாவட்ட அமைப்புகளாக இருக்கிறது. கோவை வடக்கு சி.ஆர். ராமச்சந்திரன், கோவை தெற்கு தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு சேனாதிபதி,  கோவை மாநகர் கிழக்கு கார்த்திக்,  கோவை மாநகர் மேற்கு பையா கிருஷ்ணன் என ஐந்து மாவட்ட பொறுப்பாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக்குடன் மட்டுமே  ஓரளவு இணக்கமாக பழகிவருகிறார் செந்தில்பாலாஜி. மற்ற அனைத்து பொறுப்பாளர்களும் பொறுப்பு அமைச்சரான  செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

‘மனுசனுக்கு மரியாதை முக்கியமில்லீங்ளா… செந்தில்பாலாஜிகிட்ட அந்த பழக்கமே கெடையாதுங்…காசு பணம் எப்பவேணும்னாலும்  சம்பாதிக்கலாம். ஆனா மரியாதை முக்கியமில்லீங்ளா…  இந்தாளுக்கிட்ட அடிமையா இருக்கோணும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா?’ என்று பொங்கித் தீர்க்கிறார்கள்  மாவட்டப் பொறுப்பாளர்கள்.

இதுபற்றி கோவை திமுகவில் விசாரித்தால்,  ‘ ஒன்றிய செயலாளர்கள், மாநகர பகுதிச் செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில்… மாவட்ட செயலாளர்கள் தேர்தலையும் நடத்திட திட்டமிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி கோவையில்  தனக்கு  ஓரளவு நெருக்கமாக இருக்கும் கார்த்திக் உள்ளிட்ட ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்களையும்  மாற்றிவிட்டு தன் தோதுக்கு ஏற்ற புதிய மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க வைக்க  தீவிரமாக இருக்கிறார்.

இதுகுறித்து முதல்வரிடம் லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அதாவது இரு தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று தேர்தலுக்கு முன் கோவையில் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கோவையில் வெற்றி எதுவும் கிடைக்காத நிலையில்,  இந்த வரையறையை மாற்றி மூன்று தொகுதிகள் சேர்ந்து ஒரு மாவட்டமாக ஆக்க செந்தில் பாலாஜி தலைமையிடம் பரிந்துரை செய்திருக்கிறார்.

மொத்தம் பத்து தொகுதிகளுக்கும் மூன்று மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமித்து  இரு மாவட்டங்களுக்கு தலா 3 தொகுதிகள், ஒரு மாவட்டத்துக்கு 4 தொகுதிகள் என்ற கணக்கில் வரையறையை மாற்றலாம் என்பதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம்.

mkstalin kovai visit

இப்போது இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தலுக்கு முன்பே அதிமுக வேலுமணியிடம் ஏதோ ஒரு வகையில் பணிந்துவிட்டார்கள் என்றும் இனியும் இவர்களை  வைத்துக் கொண்டிருந்தால் எம்பி தேர்தலில் அது இடைஞ்சலாக இருக்கும் என்றும் கருதுகிறார் செந்தில்பாலாஜி.

அந்த அடிப்படையில் ஐந்து மாவட்ட  அமைப்புகளை மூன்று மாவட்டமாக ஆக்கி…  கோவை மாநகரத்துக்கு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவரும் தற்போது துணை மேயராக இருக்கக்கூடிய வெற்றி செல்வனை நியமிக்கவும், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக தொண்டமுத்தூர் ஒன்றிய செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளராக சூளூர் தளபதி முருகனையும் நியமிக்கத் திட்டமிட்டு இதுகுறித்து ஸ்டாலினுக்கும் தெரியப்படுத்திவிட்டார்.

இதை அறிந்துதான் தற்போதைய மாவட்டப் பொறுப்பாளர்கள், ‘செந்தில்பாலாஜி கரூர் மாதிரி கோவை மாவட்ட திமுகவையும் தன்னோட அடிமையாக்கப் பாக்குறார். கட்சியை மீறி தனக்கு ஒரு  செல்வாக்கான வட்டத்தை உருவாக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகத்தான் கோவை மாவட்டப் பொறுப்பாளர்களை மாற்றப் பார்க்கிறார்’ என்கிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்  கோவையில் முதல்வருக்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஆபரேஷனுக்காகவே அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரிலிருந்து 500 பேரை வரவழைத்துள்ளார்.  வார்டுக்கு ஒரு ஆள், ஒரு பொறுப்பாளர் நியமித்து  புறநகர் பகுதிகளில் ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளுக்கு ஒரு பொறுப்பாளர் ஒரு மேற்பார்வையாளர் என நியமித்து வேலை செய்துவருகிறார்.

அதையெல்லாம் பார்த்து பொறுமிக் கொண்டு  கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதையெல்லாம் வேலுமணியும், பாஜகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் செந்தில்பாலாஜி மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தரப்பிடம்,  ‘ஒருவேளை அங்கே உங்கள் பதவியை செந்தில்பாலாஜி பறித்துவிட்டார் என்றால் நாங்க இருக்கோம்’ என்று அதிமுகவினரும், பாஜகவினரும் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படி கோவை திமுக கொந்தளிப்பில் இருக்கும் நிலையில்தான்  கோவைப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.  இந்த கோவை விசிட்டின் முடிவில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றமா இல்லையா என்ற மெசேஜ் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஸ்டாலின் தான் எங்க கடவுள்: டானியாவின் தாய் உருக்கம்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *