அண்ணா, கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞரின் புதிய நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 26) திறந்து வைத்துள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடம் புனரமைக்கும் பணியும், கலைஞர் புதிய நினைவிடம் கட்டும் பணியும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவையில் அறிவித்தபடி நினைவிட திறப்புவிழா இன்று மாலை 7 மணியளவில் தொடங்கியது.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள், கீ.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமாளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
முதலில் அண்ணா, கலைஞர் ஆகியோரின் உருவங்கள் வரையப்பட்டுள்ள நுழைவு வாயிலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து முகப்பில் இருக்கும் அண்ணாவின் சிலை திறந்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ள புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அமர்ந்த நிலையில் கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் அதன் எதிரே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் சதுக்கத்திற்கு அமைச்சர்களோடு சென்று முதல்வர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.
கலைஞரின் சதுக்கத்தில் “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
சதுக்கத்தின் பின்புறம் பொன்னிற மின் விளக்குகளால் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் முகத்திற்கு முன்பாக நின்று ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் என அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அண்ணா, கலைஞர் நினைவிட கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். mkStalin inaugurated kalaingar memorial
அதன் தொடர்ச்சியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் என்ற அருங்காட்சியகம், கலைஞருடன் புகைப்படம் எடுக்கும் இடம், கலைஞர் மெழுகுச் சிலை, கலைஞர் புத்தக விற்பனை நிலையம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சீதா, அக்பர் பெயர் வைத்த ஐ.எப்.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்!
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் ‘SK 23’ கதை இதுதான்?
mkStalin inaugurated kalaingar memorial