தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை கண்டு இன்னும் தமிழ் மண்ணில் தான் இருக்கிறேன் என்ற உணர்வை பெற்றுள்ளதாக சிகாகோ தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோவில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க கலை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 8) கலந்து கொண்டார். இதில் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வரவேற்பு பாடல் பாடிய சிறுவர், சிறுமியர்கள் உடன் இணைந்து ஸ்டாலின் புகைப்படம் எடுத்து கொண்டார்.
பின்னர் தனது சிறப்புரையில் ஸ்டாலின் பேசுகையில், “நான் இங்க இருப்பது இன்னும் தமிழ் மண்ணில் தான் இருக்கிறேனோ என்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது.
உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக எனது நன்றியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்காவிற்கு நான் லேட்டாக வந்நாலும் நீங்கள் அளித்த வரவேற்பு லேட்டஸ்டாக உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்து கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
அனைவரும் பிறக்க ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம் என்று அறிஞர் அண்ணா அடிக்கடி கூறுவார். இருப்பினும் நாம் எல்லோருக்கும் அன்பையும் பாசத்தையும் ஊட்டிய தாய் ஒருவள் இருக்கிறாள். அவள் தான் தமிழ்த்தாய். அவளது குழந்தைகள் என்பதில் தான் நமக்கு பெருமையாக இருக்கிறது.
கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். நம்முடைய தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வேர்களை தேடி திட்டத்தின் மூலம் தாய் மண்ணை பார்க்க இளைஞர்கள் வந்திருந்தனர். சூழ்நிலைகள் காரணமாக தாய் தமிழ்நாட்டுடன் துண்டிக்கப்பட்ட அவர்களின் உறவை அது புதுப்பிக்க வாய்ப்பாக அமைந்தது” என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “சிகோகாவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!’ என நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்ட புகைப்படத்தையும் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Duleep Trophy: ஸ்ரேயஸ் அய்யர் அணியை வீழ்த்திய ருதுராஜின் ‘இந்தியா சி’
சிவகங்கை: ஊழியர்கள் இல்லாமல் சத்துணவு வழங்குவதில் சிக்கல்!