பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள், அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை , ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று (நவம்பர் 01) நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து பருவமழை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள், அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.

வெள்ளப்பெருக்கு தடுப்பு குழு!
அவர் பேசுகையில், ”கடந்த ஆண்டு நாம் பெருமழையை சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த மழை நமக்கெல்லாம் மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இதே போல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மீண்டும் அதற்கான சூழ்நிலை அமைந்துவிடக் கூடாது என்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் திருப்புகழ் தலைமையில் வெள்ளப்பெருக்கு தடுப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள தடுப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!
அதன்படி இம்முறை மழைநீர் தேங்காதவாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டியது மாவட்ட நிர்வாகிகளின் கடமையாக நான் கருதுகிறேன்.
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பேரிடர் காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணியாகும்.
இதனை உங்கள் சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் உணர்த்தி அவர்களைபொறுப்பாக செயல்பட வைக்க வேண்டும்.
குறிப்பாக மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள், தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் ஆகியவை ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
வெள்ள பெருக்கால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க பல்மண்டல குழுக்களை அமைக்க வேண்டும்.

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள்!
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு அவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ உதவிகள் போன்ற அடிப்படை உதவிகளை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் போது முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பலவீனமான சுற்றுச்சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வயல் நிலங்களில் மழைநீர் புகுந்து சேதப்படுத்தாதவாறு அவை வடிவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.
கரையோர பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை முன்னதாகவே கூறப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்
மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!
மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சித் துறையை சேர்ந்த அலுவலர்களும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, வேளாண் துறை, தீயணைப்புத் துறை போன்றவைகள் தனித்தனியாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசுடன் சேர்ந்து மக்களும் இணைந்து பணியாற்றக் கூடிய வகையில் வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநகராட்சி பகுதிகளும் அவசர உறுதி மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். பொது தொலைபேசி எண்களை மக்களிடம் பரப்ப வேண்டும்.
மக்கள் ஆதரவுடன் வெல்வோம்!
தொலைபேசி வழியாகவும், வாட்ஸ்அப் வழியாகவும் நம்முடைய கவனத்திற்கு வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
”கோரிக்கைகள் வைத்தோம், அதனை உடனடியாக அதிகாரிகள் நிவர்த்தி செய்து தந்தார்கள்” என்று பொதுமக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டாக இருக்கும்.
சிறு தவறு என்றாலும் அது பெரும் கெட்ட பெயரினை ஏற்படுத்தும். அதே வேளையில் சிறு உதவி என்றாலும் அது பெரும் பெயரை பெற்றுத்தரும் என்பதை அதிகாரிகள் மறந்து விட வேண்டாம்.
இயற்கை பேரிடர் காலம் என்பது அரசு நிர்வாகத்திற்கு சவாலான காலம். அந்த சவாலை மக்கள் ஆதரவுடன் இணைந்து நாம் வெல்வோம்.” என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தின் வழியில் குஜராத்: மோர்பி செல்லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு!
தமிழகம் முழுவதும் மழை: வானிலை அப்டேட்!