திமுக-பாஜக உறவா? மனம் திறந்த ஸ்டாலின்

அரசியல்

”சமத்துவம் படைத்து சனாதனத்தின் சங்கத்துவத்தை வீழ்த்துவது தான் நான் அவரது 60வது பிறந்தநாளில் திருமாவளவனுக்கு கொடுக்கும் கொள்கை பரிசு” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியின் 60-வது பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.

”கோட்டையில் இருந்தாலும், அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்றுதான். இதுகுறித்து பேச திருமாவளவனுக்கு முழு உரிமை உண்டு. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகளுடன், குறைந்தபட்ச சமரசத்தை திமுக கையாண்டால் கூட, திமுக அணியில் பாஜக எதிர்ப்பு மெல்ல மெல்ல நீர்த்து போய்விடும் என்று கூறி உள்ளார்.

டெல்லிக்கு காவடி தூக்குவதற்கா செல்கிறேன்?

ஆனால் திருமாவளவன் குறிப்பிட்டது போல, குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக, பாஜகவுடன் செய்து கொள்ளாது. நான் இரு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறேன். ஒன்று கட்சி தலைவர் பொறுப்பு, இரண்டாவது, உங்களால் அமர்ந்திருக்க கூடிய அனைவருக்குமான முதல்வர் பொறுப்பு.

நான் டெல்லி செல்வது குறித்து ஆசிரியர் கீ.விரமணி சூசகமாக குறிப்பிட்டார். நான் டெல்லிக்கு காவடி தூக்குவதற்கா செல்கிறேன்? கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்பதற்கா செல்கிறேன்? கலைஞரின் புள்ள நான். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதை மனதில் கொண்டுள்ளேன்.

இது தான் பிறந்தநாள் பரிசு!

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில், பிரதமரிடம் பேசி, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கான பொறுப்பு எனக்கு உள்ளது. ஒன்றிய, மாநில அரசுக்கு இடையே உறவு இருக்கிறதே அன்றி, திமுகவுக்கும், பாஜகவுக்கும் அல்ல. திமுக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. எனவே திருமாவளவன் இதுகுறித்து கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும் திராவிட கழகத்தின் சாதனைகளை ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டார். உங்கள் சகோதரர் என்ற முறையில் பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசமும் நான் செய்து கொள்ள மாட்டேன். உரிமையுடன் இதனை சொல்ல விரும்புகிறேன். இதுவே திராவிட மாடலின் முழக்கம்! சமத்துவம் படைத்து சனாதனத்தின் சங்கத்துவத்தை வீழ்த்துவது தான் திருமாவளவன் பிறந்தநாளில் நான், அவருக்கு கொடுக்கும் கொள்கை பரிசு” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *