மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து திமுக கூட்டணி, அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் சம்பத் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று காலை தொடங்கி உள்ளார்.
திரளான மக்கள் கூட்டத்திற்கு நடுவே திறந்த வேனில் நின்றபடி அவர் பேசுகையில், “என் உயிரோடு கலந்த ஊர் ஈரோடு, பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு, அண்ணா வாழ்ந்த ஊர் இந்த ஈரோடு கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும், குருகுலமாக இருந்த ஊர் இந்த ஈரோடு. திமுகவின் அடித்தளமே இந்த ஈரோடு தான்.” என்று ஆரம்பித்தார்.
அதன்பின்னர் ஆட்சிக்கு வந்து செய்யப்பட்டுள்ள பல்வேறு சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறினார்.
அவர், “பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வாக்குறுதியை நிறைவேற்றி பலர் பயன் அடைந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் இந்தியாவில் எங்குமே இல்லை. தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றைரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
உயர்கல்வி செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 தரும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.” என்று பேசினார்.
தொடர்ந்து அவர், திமுக கூட்டணி அளித்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும்.
நிதி நிலை சரியாக இருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றி வைத்திருப்போம்.
கலைஞர் கூறிய சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லாததையும் செய்வோம்.” என்றார்.
இறுதியாக, “பிரச்சாரம் தொடங்கியுள்ள சம்பத் நகரில், சம்பத் மகனுக்கு வாக்கு கேட்டு கலைஞர் மகன் வந்திருக்கிறேன். எனவே வரலாற்று சிறப்புமிக்க இடைத்தேர்தலில் நீங்கள் 60-70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இறுதிகட்டத்தில் இடைத்தேர்தல் : மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி!