எதிர்க்கட்சிகள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் கூறிய 7 ஆலோசனைகள்!

அரசியல்

ஜூன் 2023ஆம் ஆண்டு கூடினார்கள்… மே 2024 ஆண்டு வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் இருக்க வேண்டும் என்று பாட்னா கூட்டத்தில் பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னை திரும்பினார்.

இதனையடுத்து விமான நிலையத்திலேயே அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ”இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. அதில் நானும், திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவும் பங்கேற்றோம்.

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டம் நம்பிக்கையை உருவாக்குவதாக இருந்தது.

நேற்று பாட்னா சென்றதும் மதிப்பிற்குரிய மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அது மகிழ்ச்சியை தந்தது.

ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்க கூடிய பாஜகவை வீழ்த்தும் வகையில் இந்த கூட்டத்தை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இது பாஜகவை மட்டும் வீழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டம் அல்ல. மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஏழை மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்.

இதில் அனைத்து கட்சிகளும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் கடைசிவரை உறுதியாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் கூறினேன்.

கூட்டத்தில் பேசியது என்ன?

ஜூன் 2023ஆம் ஆண்டு கூடினார்கள்… மே 2024 ஆண்டு வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் நடந்துள்ள அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. கட்சிகள் இடையேயான அதே வலிமை அகில இந்திய அளவிலும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளேன்.

எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம்.

கூட்டணி அமையவில்லை என்றால் தொகுதி பங்கீடுகளை செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லையென்றால் பொது வேட்பாளர் அறிவித்துக்கொள்ளலாம்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

அரசியல் கட்சிகளிடையே குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்க வேண்டும். இதுபோன்றவற்றை செய்ய ஒருங்கிணைந்த குழு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

பாஜகவை வீழ்த்துவதை அனைத்து கட்சிகளும் நோக்கமாக கொண்டுள்ளன. அதற்கு ஒற்றுமையே முக்கியம். அது இந்த கூட்டத்தின் மூலம் கருவாக மாறியிருக்கிறது. விரைவில் அது உருவாகி பாஜக வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படும் என்பது உறுதி” என்றார்.

விமானத்தில் செல்வதற்காக வந்துவிட்டேன்

தொடர்ந்து அவர், “நன்றி சொல்லி முடியும் வரை கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். மதிய உணவிற்கு பிறகு தான் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் விமானத்தில் புறப்படுவதற்கு நேரம் ஆகி விட்டதால் அவர்களிடம் தகவல் கூறிவிட்டு வந்துவிட்டேன்.

இதற்கு பின்னால் வேறு எந்த நோக்கமும் இல்லை. ஆம் ஆத்மி பங்கேற்காதது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மறக்கமுடியாத சாம்பியன்ஸ் டிராபி: வரலாற்றில் நிலைபெற்ற தோனியின் கேப்டன்ஷிப்!

ஜூன் 28 ஆஜர்படுத்தப்படுகிறாரா செந்தில் பாலாஜி?

mkstalin gave 7 tips to opposition meet
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *