இந்தியா முழுவதும் விடியலை அளிப்போம் என கூறியுள்ள முதல்வர் முதலில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி கொடுக்கட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
வள்ளலார் பிறந்தநாளையொட்டி சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் வள்ளலார் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.
இந்தியா இனிமேல் வளர்ந்த நாடு!
நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ”வள்ளலாரின் அணையாஜோதி பள்ளியில் ஏற்றப்பட்டதை முக்கியமான விஷயமாக கருதுகிறேன். கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் நாம் தவித்தோம்.
உலகிலேயே அதிக இறப்புகளை கொண்ட நாடாகவும், பாதிப்புக்குள்ளாகும் நாடாகவும் இந்தியா இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஆனால் கொரோனா தடுப்பூசி மற்றும் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் அரிசி வழங்கப்பட்டதால் 40 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என லாண்ட்செட் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிறுவிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவை வணக்கத்துக்குரிய ஒரு கோளாக நாம் பார்த்து வருகிறோம். வேறு நாடுகளில் இது கிடையாது. தஞ்சையில் சந்திரனுக்கென்று கோயில் உள்ளது. நவகிரகத்தில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால்தான் தென் துருவத்தில் ரஷ்யாவை அனுமதிக்காத நிலவு இந்தியாவை அனுமதித்துள்ளது.
சந்திரனுக்கு வெற்றிகரமாக சென்றுள்ளோம் என்பதை விட இந்தியா தற்போது சூரியனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியா இனிமேல் வளர்ந்து வரும் நாடு அல்ல வளர்ந்த நாடு” என்று அவர் பேசினார்.
சிவசக்தி பெயரை எதிர்ப்பவர்கள் யார்?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ”சந்திரயானில் கால்பதித்துள்ளோம். சூரியனை நெருங்க உள்ளோம். சந்திரனில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி சிவ சக்தி பெயரிட்டது சிவ சக்தி என்பது சக்தியின் வடிவம். அனைவரிடமும் சக்தி உள்ளது.
சிவசக்தி என பெயரிட்டதை நான் மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. கருத்து சார்ந்ததாக பார்க்கிறேன். சிவனும் சக்தியும் இந்த உலகில் சக்தி வாய்ந்தது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். அனைவரும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவன் இல்லை என்று கூறுபவர்களும், பிரதமர் எது கூறினாலும் தவறு சொல்பவர்கள்தான் விமர்சிக்கின்றனர்.
காவிரி தண்ணீர் வாங்கி தரட்டும்!
சி.ஏ.ஜி அறிக்கையில் வெளியானது மோசடி இல்லை. நீண்ட நாட்களுக்கு முன் திட்டமிட்டதைவிட கூடுதலாக செலவளிக்கப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊழலை தடுத்தவர். மோடி இருக்கும் போது ஊழல் நடக்காது. சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியது ஊழல் என கூற முடியாது. தெளிவான கருத்து கூறப்படும்.
முதலமைச்சர் இந்தியா முழுவதும் விடியலை அளிப்போம் என கூறி உள்ளார். முதலில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி அளிக்கட்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.