மாநிலங்களை ஒழிக்க வேண்டும் அல்லது மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா (Speaking4India) எனும் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற குரல் ஆடியோ சீரிஸ்சின் மூன்றாவது பாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 31) காலை வெளியிட்டுள்ளார்.
இந்தியா அற்புதமான பூந்தோட்டம்!
அதில் ’மாநில உரிமைகள்’ என்ற தலைப்பில் அவர் பேசியுள்ள ஆடியோவில், ”இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள் இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள், பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளது. அவர்களுக்கான அரசியல் சட்ட உரிமைகளும் இருக்கிறது. இத்தனை வேறுபாடுகளை கடந்து தான் நாம் எல்லோரும் இங்கு ஒற்றுமையாக வாழ்கிறோம்.
அதன்படி இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதனால் தான் நம் நாட்டினுடைய நிர்வாக அமைப்பினை உருவாக்கியவர்கள் இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல், ஒன்றியமாக உருவாக்கினார்கள். அதை சிதைக்க பாஜக தற்போது முயற்சிக்கிறது.
மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜக!
முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும் அல்லது மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பாஜக முயற்சிக்கிறது. பிரதமரான பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது.
மோடி முதலமைச்சராக இருந்த வரைக்கும் பேசியதற்கும் பிரதமர் ஆன பிறகு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
டெல்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையுடன் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் மாநில முதலமைச்சர் பங்கேற்று கருத்து தெரிவிக்கக்கூடிய திட்டக் குழுவை கலைத்து சத்தே இல்லாத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார்.
மாற்று கட்சி ஆட்சிகளை பழி வாங்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வர முடியவில்லையோ, அங்கே இருக்கிற கட்சிகளை இரண்டு, மூன்றாக உடைத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள்.
ஐசியூவில் மாநில நிதி நிலைமை!
முக்கியமாக தன்னை கூட்டாட்சி கொள்கையை ஆதரிப்பவன் என்றும், ஒன்றிய அரசுக்கு காவடி தூக்க மாட்டேன் என்று கூறியவர் மோடி. ஆனால் இன்று மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற கூட ஒன்றிய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை அவர் உருவாக்கி உள்ளார்.
மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளிடமும் ஆலோசனை செய்வோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.
கூடுதலாக மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரங்கள் வழங்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குகிற காலத்தை கூட நீட்டிக்க முடியாது என்று தற்போது சொல்லிவிட்டார். மாநிலங்களின் பங்கையும் மத்திய அரசு ஒழுங்காக கொடுப்பது இல்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதி நிலைமை ஐசியூவில் உள்ளது. 12வது நிதி கமிஷனில் இருந்து நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டதால், கடந்த 19 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
வரும் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்படப்போகிறது.
பாஜக ஆட்சியின் உண்மை முகம்!
அதே மாதிரி கிராமப்புற ஏழை எளிய தாய்மார்கள் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்தது மட்டுமின்றி, வேலை செய்கிற தாய்மார்களுக்கு சம்பளம் கூட ஒழுங்காக கொடுக்காமல் பாஜக ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் இதே தான் நிலைமையே நிலவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ஒன்றிய அமைச்சர் ஒருவர், மோடி படத்தை போடவில்லையென்றால், மத்திய அரசினுடைய திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார். இதுதான் மாநிலங்களுக்கு அதிக நிதி ஆதாரங்களை தருவோம் என்று சொன்ன பாஜக ஆட்சியின் உண்மை முகம்.
ஆளுநரை பயன்படுத்தும் பாஜக!
மாநில பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கவுன்சில் அமைத்து தீர்வு காண்போம் என்று சொன்னார்கள். அந்த கவுன்சிலையும் இப்போது முடக்கிவிட்டார்கள்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க, பாஜக ஆளுநரை பயன்படுத்துகிறது. இப்படி மாநிலங்களின் உரிமையையும், சட்டமன்றங்களுடைய மாண்பையும் மத்திய அரசு சிறுமைப்படுத்தி வருகிறது.
ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. இதனையடுத்து அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி கூண்டோடு மாற்றப்பட்டனர்.
இந்தியா ஜனநாயகத்தை காப்பற்ற போராடும் கட்சியாக திமுக விளங்குகிறது. திமுக கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு சமூக மக்கள் வாழ்கின்றனர்.
இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை.
#Speaking4India Episode – 3
➡️ மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்!
➡️ எபிசோட் 2-இன் ரீச்சும், ஒன்றிய அரசின் ரியாக்ஷனும்!
➡️ மாநில முதலமைச்சராக ஆதரவு பேச்சும் – பிரதமரானவுடன் எதிர்ப்பும்!
➡️ மாநில நிர்வாகத்தை முடக்கிட, ஆளுநர் மாளிகை?
➡️ மினி… pic.twitter.com/iuSm9slnIz
— M.K.Stalin (@mkstalin) October 31, 2023
இந்தியாவை ‘இந்தியா கூட்டணி’யிடம் ஒப்படையுங்கள்!
மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்.
மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், அதற்கு மக்கள் தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நிறைவாக, இந்த எபிசோடைக் கேட்ட உங்களிடம் உரிமையோடு நான் கேட்பது, இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு!
1992ல் செய்ததை மீண்டும் செய்யுமா பாகிஸ்தான்?