டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By christopher

கலைஞர் கோட்டம் மற்றும் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்காக குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்படவிருந்த நிலையில், விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த முதல்வர், விமானம் புறப்பட தாமதம் ஆனதால் வீடு திரும்பினார்.

இதனையடுத்து அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டு இன்று காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

அங்கு காலை 11.30 மணிக்கு குடியரசுத்தலைவர் முர்முவை சந்தித்து, கலைஞர் கோட்டம் மற்றும் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க முதல்வர் அழைப்பு விடுக்க உள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று,

கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மூடப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில்: காரணம் என்ன?

பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு: 1,200 வீடுகள் அகற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share