திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கட்சியிலும், நிர்வாகத்திலும் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கடந்த 15ஆம் தேதி பயணத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
அவர் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு தான், தான் ஓய்வெடுக்கும் இடமாக ஜெயங்கொண்டத்தில் இருக்கின்ற நூறு ஆண்டுகள் கடந்த அரசு பயணியர் மாளிகையில் தங்கப்போவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இந்த முடிவு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அரசு பயணியர் மாளிகை 1920ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் 104 வருடங்களுக்கு பிறகு தற்போதுவரை பெயிண்ட் அடிப்பது, தவிர்த்து எந்த விதமான புதுப்பிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது முதலமைச்சர் தங்குகிறார் என்ற நிலையில், அவர் வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே, தினந்தோறும் அங்கு சென்று புதுப்பிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அதன்பின்னர் தான் அந்த மாளிகையில் ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி இரவு தங்கினார்.
அதனையடுத்து 15ஆம் தேதி காலையில் விசிக தலைவரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் முதல்வரை சந்தித்து, அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதே நேரத்தில் அரியலூர் திமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கரும், அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகளோடு, முதல்வரை சந்தித்து நீதிமன்றத்தை அமைக்க கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி காலையில், தான் தங்கியிருந்த இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் சுமார் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் சிலையை திறந்து வைக்க தனது வாகனத்தில் புறப்பட்டார் ஸ்டாலின்.
அவருடன் அந்த வாகனத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் முதல்வர் உதவியாளர் தினேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது நீதிமன்ற கோரிக்கை நிறைவேற்றுவது சம்பந்தமாக நிதிச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, நீதிமன்றம் கட்டுவதற்கான நிதி சம்பந்தமான ஆலோசனை செய்த பின்னர் , அமைச்சர் சிவசங்கர் மற்றும் திருமாவளவன் எம்.பி கோரிக்கையான நீதிமன்றம் கட்டுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிட முடிவெடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பயணியர் மாளிகை முதல் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி வரையில், மக்கள் கூட்டம் திரண்டிருந்ததை பார்த்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்தே சென்றார்.
அதன்பிறகு வாகனத்தில் ஏறி கொண்டு, ஓட்டுநரை மெதுவாக இயக்கச் சொல்லி, அங்கு சென்று சிலை திறந்து வைத்தார்.
அதன்பிறகு நடந்த அரசு நிகழ்ச்சியில் தான், திருமா, சிவசங்கர் வைத்த கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அரியலூரில் ரூ. 101.50 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவித்தார்.
மேலும், அதே மேடையில் ‘அரியலூர் அரிமா’ என சிவசங்கரை குறிப்பிட்டு, இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தான் போக்குவரத்துத்துறையின் மீது எந்தவிதமான பிரச்னைகளும், சர்ச்சைகளும் வராத அளவிற்கு சிறப்பாக கையாண்டுள்ளதாக பாராட்டினார். மேலும் கடைசி பஸ் வரை கண்காணித்து போக்குவரத்து பணிகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டு பாராட்டினார்.
கள ஆய்வு வருகையையொட்டி மாவட்டத்தில் 10 இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு அளித்து அசத்தினார். அப்போது ஒரு இடத்தில் உடையார் பாளையம் பேரூராட்சி கழக நிர்வாகி கோபாலகிருஷ்ணனை பார்த்து காரை நிறுத்திய முதல்வர், அவரை அழைத்து ”அண்ணே எப்படி இருக்கீங்க?” என உடல்நலத்தையும், விசாரித்து புறப்பட்டார்.
அமைச்சரும், அரியலூர் மாவட்ட செயலாளருமான சிவசங்கர் 12 ஒன்றியத்திற்கு பிரச்சார வாகனமாக 12 பொலீரோ கார்களை கட்சி நிதியில் இருந்து வாங்கி வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த 12 கார்களின் சாவிகளை முதல்வர் ஸ்டாலின் கையால் வழங்க கேட்டுக்கொண்டார். அதை ஏற்று தனது கையால் ஒன்றிய செயலாளர்களிடம் சாவிகளை வழங்கிய போது நெகிழ்ந்து போனார் ஸ்டாலின்.
அரியலூர், பெரம்பலூர் பயணத்தை முடித்துக்கொண்டு, திருச்சி விமான நிலையத்திற்கு செண்ட் ஆப் செய்ய சென்ற போது, அமைச்சர் சிவசங்கரை அழைத்த முதல்வர் “சங்கர் நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தீர்கள்” என பாராட்டி நெகிழ்ந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி