கள ஆய்விற்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று (நவம்பர் 9) நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யும் வகையில் ’கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கடந்த 5,6ஆம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக கோவை சென்று அங்கு கள ஆய்வு பணியை மேற்கொண்டார். மேலும் விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் 8 தளங்களுடன் கூடிய புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
கோவையை அடுத்து கள ஆய்விற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் இன்று இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சாலை மார்க்கமாக வேனில் விருதுநகர் சென்ற அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மக்கள் கூட்டத்தை கண்டு வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை ஏற்றார்.
தொடர்ந்து கன்னிசேரிபுதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் அங்கு அவர்களின் பணிச்சூழல், செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அவருடன் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோரும் முதலமைச்சரின் கள ஆய்வில் உடனிருந்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு விருதுநகர் மருத்துவக் கல்லூரி அருகே கந்தசாமி மண்டபத்தில் கட்சியினருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதன்பின்னர் நாளை காலை 9 மணிக்கு ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் முழுவதும் விருதுநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறதா? : மா சுப்பிரமணியன் விளக்கம்!
நயன்தாராவின் ’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!