மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 7) அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் படி தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும்? என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் வழிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் லைவ் வீடியோவில் உரையாற்றினார். முதலில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு பெண்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து அவர், ”மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டியுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். மகளிர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்த கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலவச பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகிவற்றை தொடர்ந்து மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமுறை, தலைமுறைக்கு பயனளிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இது பெண் இனத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகார கொடை” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சொந்த ஊரில் டிஐஜி விஜயகுமார் உடல்: அமைச்சர், டிஜிபி நேரில் அஞ்சலி!