’அமைதியை குலைக்க வந்துள்ளாரா’?: ஆளுநரை சாடிய முதல்வர்

Published On:

| By christopher

”ஆளுநர் மூலமாக எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மொழிப்போர், மிசா, பொடா, தடா உள்ளிட்டவற்றையே நாங்கள் பார்த்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் இன்று (மே 7) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, சீரோடும், சிறப்போடும் ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களில் 1,222 கூட்டங்கள் திமுக சாதனை விளக்கத்திற்காக நடத்தப்பட உள்ளது. இது வரலாற்று சாதனையாகும்.

1991-96 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் மோசமான ஆட்சிக்காலமாக கருதப்பட்டது. ஆனால் அதைவிட மோசமான ஆட்சியாக 2016-21 அதிமுக ஆட்சிக்காலம் இருந்தது.

அப்போது திமுக ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வராதா என்று ஏங்கி இருந்த மக்களின் குரலாக 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி மீண்டும் உதயமானது.

கடந்த 10 ஆண்டு காலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்துள்ளோம்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கோட்பாடுகளில் உறுதியாக உள்ளது திமுக.

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே கடந்த 2 ஆண்டுகள் அமைந்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

mkstalin attacking governor on defamation
கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள்

எதிர்க்கட்சி தலைவரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் எந்த கலவரமும் இல்லையே, முதலீடுகள் அதிக அளவில் வருகிறதே… நாம் பொழப்பு நடத்த முடியாதே என்று சிலர் பொறாமையில் புலம்பி திரிகின்றனர்.

அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள் பேசுவதை நான் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அப்படிதான் பேசியாக வேண்டும். ஆனால் அரசின் நிர்வாக அங்கமாக இருக்கக்கூடிய ஆளுநர் ஏன் ஒரு எதிர்க்கட்சி தலைவரை போல் பேசுகிறார்?

தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த ஆளுநர், திமுக அரசு குறித்து பல்வேறு அவதூறுகளை பரப்பியுள்ளார்.

ஆனால் அதே ஆளுநர் முதல்வராகிய என்னை சிறந்த மனிதர், அன்பான மனிதர் என்று பாராட்டியுள்ளார்.

எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் நட்பு பாராட்டுவது தான் தமிழர் பண்பாடு என்பதை அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

அதிலிருந்து இம்மியளவும் நகரமாட்டேன். அதேநேரத்தில் கொள்கையிலும் குழம்பிக் கொள்ளமாட்டேன். ஆளுநர் உடனான தனிப்பட்ட நட்பு வேறு, கொள்கை வேறு. அதில் உறுதியாக இருக்கிறேன்.

சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம்.

கடந்த சட்டமன்றத்தில் பங்கேற்ற ஆளுநர், தனது உரையில் இல்லாததை பேசினார். இருப்பதை தவிர்த்து மரபை மீறி செயல்பட்டார். அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்ற மக்களாட்சியின் மாண்பை காக்கும் விதமாக அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தேன்.

பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு அமைதி பூங்கா இல்லை என்று கூறியுள்ளார்.

மிஸ்டர் ஆளுநரே, பாஜக ஆளும் மணிப்பூரில் தற்போதும், கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றதும் தான் கலவரம். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி எந்த கலவரமும் நடைபெறவில்லை.

திராவிடம் என்பது காலாவதியாகிவிட்டது என்கிறார். அவருக்கு சொல்கிறேன். திராவிடம் யாரையும் பிரிக்காது, அனைவரையும் அரவணைக்கும்.

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம்.

ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். அதனால் தான் இப்படி உளறி வருகிறார்.  

ஆளுநர் மூலமாக எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மொழிப்போர், மிசா, பொடா, தடா உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்தவர்கள். ஆட்சியாக, கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்ற துணிச்சலில் நான் இருக்கிறேன். தொண்டர்களின் உற்சாகத்தோடு பயணிக்கும் நான் அவர்களோடு சேர்ந்து பயணிப்பேன்.” என தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

‘தமிழை விட்டுக்கொடுத்து ஆட்சியா?’: டி.ஆர்.பாலு ஆவேசம்!

விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பின்னணி பாடகி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share