தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் பயணம் செய்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதால் தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தகவலறிந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி இருவரும் பதறிப்போய் விசாரித்த நிலையில், உடனடியாக அவரை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அமைச்சர்கள் நேரம் கருதி பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு என்ன நடந்தது?
நேற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவு ஓய்வு எடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். பின்னர் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, சேலத்திலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி நோக்கி அவர் பயணித்தார்.
அப்போது தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் காரியமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு காத்திருந்தார்.
பழனியப்பனைத் தொடர்புகொண்ட அமைச்சர் அன்பில், ”அண்ணா பத்து நிமிடத்தில் வந்து விடுவேன்” என்று சொல்லியுள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதை எடுத்துப் பேசிய சில நிமிடங்களில்தான்… ‘நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு’ என்று டிரைவரிடம் கூறியுள்ளார். உடனடியாக பழனியப்பனுக்கு போன் போட்டிருக்கிறார்கள்.
போனை எடுத்த பழனியப்பன் ”ஹலோ, அண்ணா ஆபிஸில்தான் இருக்கிறேன். இன்னும் நீங்க வரலையா?” என்று கேட்டிருக்கிறார். அப்போது அன்பில் மகேஷ் கொஞ்சம் மெதுவான குரலில், ”அண்ணே… திடீர்னு ஹார்ட் பெயின் போல இருக்கு. நல்ல டாக்டரை பார்க்கணும்” என்று கூறியதும், துடித்துப்போனார் பழனியப்பன். அருகேயுள்ள அருண் மருத்துவமனை டாக்டரிடம் பேசிவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷை அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு பிபி, இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. அதற்குள் பழனியப்பன் கிருஷ்ணகிரி அரசு விழாவிற்கு வந்துள்ள அமைச்சர்கள் சிவசங்கரன், சக்கரபாணி ஆகியோரிடம் தகவல் சொல்ல அவர்களும் அருண் மருத்துவமனைக்கு வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வுமான ஒய்.பிரகாஷ், தடங்கம் சுப்பிரமணியன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர்.
இதுகுறித்து தகவறிந்த முதல்வர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பழனியப்பன் லைனுக்கு வந்து, அன்பில் மகேஷ் உடல் நிலையைப் பற்றி கேட்டறிந்தார். “மகேஷால் பேசமுடியுமா?” என கேட்க, ’பேசுவார் தலைவரே’ என்று பழனியப்பன் சொல்ல, மகேஷிடம் செல்போனை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
“மகேஷ் எப்படி இருக்கீங்க டாக்டர் என்ன சொன்னார், பயப்பட வேண்டாம்… உடனே விமானத்தில் சென்னைக்கு வந்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு அமைச்சர்களிடம் விசாரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து முதல்வர் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் மகேஷிடம் பேசி பதறிப்போய், ”உடனே சென்னைக்கு வா…” என்று அழைத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். அதற்கு அவர்கள் தரப்பில், “கேஸ் ஃப்ராப்ளம் இருக்கலாம், பயப்படும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் அமைச்சர் அலட்சியமாக இருந்துவிட முடியாது. அதனால் இதய நிபுணர் டாக்டரை கன்சல்ட் பண்ணுவது நல்லது என்று பரிந்துரை செய்தோம். சென்னைக்கு போவதற்கு நேரமாகும் என்பதால் பெங்களூர் நாராயண இருதாலய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்” என்றனர்.
இதனையடுத்து அமைச்சர் சிவசங்கரன், சக்கரபாணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணியன், ஒய்.பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட்டோர் பதினைந்து கார்களில் சென்றுள்ளனர் பெங்களூருக்கு.
தற்போது நாராயண இருதாலய மருத்துவ மனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.