அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
”கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர், இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறை முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்ரல் 27) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், “அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வு, குழந்தை ஊட்டச்சத்து திட்டங்கள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
ஓவ்வொரு திட்டமும் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நான் நாள்தோறும் விசாரித்து வருகிறேன்.
மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் கோடிகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. எனவே இரண்டு வகையிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும் யாரும் தனியாக செயல்பட முடியாது. அலுவலர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திப்பது என்பது மிக மிக முக்கியமானது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசு துறைகள். எனவே ஒவ்வொரு துறை செயலாளர்களும் தங்கள் துறையில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை அறிய கூட்டு கூட்டங்கள் அவசியமாகிறது.” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சேவை ஆற்றிய சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறை அலுவலர்களை பாராட்டி, முதலமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றிய மாற்றுத் திறனாளி: நடந்தது என்ன?
இணையத்தில் பேசுபொருளான அமிதாப் பச்சன் ட்விட்டர் ப்ளூ டிக்!