இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கை சிறையில் நீண்டகாலமாக உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இதன்காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்களில் ஐஸ் பெட்டிகள், மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், பேட்டரி மற்றும் எஞ்சின் போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
எனவே, இந்த விவகாரத்தை இந்தியா வருகை தரும் இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.
கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும்.
மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கிடும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை அப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1956-ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும் எங்களது கட்சியும் உறுதியாக உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான, உறுதியான தீர்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை பிரதமர் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்