இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 19) கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் நேற்று (ஜூன் 18) மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது மீன்பிடி படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலாவதியான ’காமராஜர் ஆட்சி’ வாசகம்!
மீண்டும் ‘பேட்ட ரேப்’ கூட்டணி: ரகுமானுடன் இணையும் பிரபு தேவா