தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையீடு செய்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் சுதந்திரமாக நிகழ வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அனூப் பர்ன்வால், அஷ்வினி குமார் உபாத்யாய், டாக்டர் ஜெயா தாக்குர் மற்றும் டெமோக்ராடிக் ரீஃபார்ம்ஸ் எனும் தன்னார்வ அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று (மார்ச் 2) உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதி அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வில் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
விசாரணையின் போது அரசு தரப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது அரசின் நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதி.
தேர்தல் ஆணையராக சுதந்திரமாகச் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.என்.சேஷன். அவரை அரசுதான் நியமித்தது. இவரைப் போல் புகழ் பெற்ற தேர்தல் அதிகாரிகள் பலர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தனி செயலகம் இருக்க வேண்டும். நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செலவினங்களைக் கையாள்வதற்குத் தனியான சுதந்திரமான செயலகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றமும் மத்திய அரசும் எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
முதல்வர் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தேர்தல் ஆணையர் நியமனத்தில் சரியான நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. ‘தன்னாட்சி அமைப்புகள்’ கொள்ளையடிக்கப்படும் போது, உச்சநீதிமன்றத்தின் இந்த தலையீடு என்பது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முக்கியமானது.
அதன் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
ஈரோடு இடைத்தேர்தல்: 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி!
நாகாலாந்தின் முதல் பெண் எம்.எல்.ஏ ஆனார் ஹெகானி ஜகாலு