இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவை தொடக்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு உலக தமிழர் பேரமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் இன்று (நவம்பர் 11) காலை வருகை தந்தார்.
பழ.நெடுமாறனை வரவேற்பதற்காக வீட்டின் போர்டிக்கோவில் காத்திருந்தார் ஸ்டாலின். நெடுமாறன் காரில் இருந்து இறங்கி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அவரது கையைப் பிடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சோஃபாவில் நெடுமாறனை அமரவைத்துவிட்டு, சிறிது நேரம் நலம் விசாரித்தார்.
அப்போது நெடுமாறன், “நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவுக்கு நீங்க கட்டாயம் வரணும்” என்று வேண்டுகோள் விடுத்து அழைப்பிதழை கொடுத்தார். பின்னர், ‘தமிழன தலைவர் கலைஞர்’ என்ற புத்தகத்தைக் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அழைப்பிதழை கொடுத்துவிட்டு பழ.நெடுமாறன் புறப்பட தயாரான போது, “வாங்க கார் வரைக்கும் கொண்டு போய் விட்றேன்” என மீண்டும் அவரை கைத்தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்று காரில் ஏற்றி வைத்தார் ஸ்டாலின். கார் புறப்பட்டதும், வணக்கம் வைத்து வழியனுப்பி வைத்தார்.
முதுபெரும் தலைவரான பழ.நெடுமாறனை ஸ்டாலின் மிக கனிவோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“வானம் இடிந்து விழுந்துவிடாது” : TNUSRB தலைவர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
ஓபிசி மக்களை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறதா? – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்