மாநில அரசை நிதி ரீதியாகப் பிளவுப்படுத்தி ஒழிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கேரளப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஒன்றிய அரசு மாநிலங்களின் அதிகாரத்தை அபகரித்து வருவதாகவும், அரசியலமைப்பு அமைப்புகளை வலுவிழக்கச் செய்வதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்களைப் பிளவுப்படுத்தி,
பன்முகத்தன்மையை அழித்து ஒற்றையாட்சியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கிப்பி போன்ற நிறுவனங்கள் மாநிலங்களுக்கு உதவக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், மாநில அரசை நிதி ரீதியில் பிளவுப்படுத்தி, ஒழிக்க முயற்சி செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார். இந்தக் கூட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என்னைப் பொறுத்தவரை பினராய் விஜயன் எப்படி உறுதியாக நிற்கிறாரோ, அந்த மாதிரி தமிழக முதல்வர் ஸ்டாலின் நிற்கலாம்.
கேரளாவைவிட பன்மடங்கு வலுவான மாநிலம் தமிழ்நாடு. கேரள முதல்வரைவிட வலுவான மக்கள் பின்னணி கொண்டிருக்கிற ஒரு முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்”
என்று குறிப்பிட்டிருந்தது போல் தமிழக முதல்வரின் கேரளப் பயணமும் கேரள முதல்வரின் குற்றச்சாட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
-ராஜ்