ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 27) பார்வையிட்டார்.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார்
அங்கு தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு மே 25 அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்திற்கு சென்றார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ஜெட்ரோவுடன் (JETRO) இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கலந்து கொண்டார்.
அதன்பின்னர், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த இயந்திரங்களை இயக்கி ஆய்வு செய்தார்.
பின்னர் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களான டகாயுகி புரோகுஷி மற்றும் கோ கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர்களிடம் தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவேண்டும் என்றும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்!
கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான #Komatsu நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன்.
ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோமட்சு தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கோமாட்சு நிறுவனம் தமிழ்நாட்டில் ’கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?
கேன்ஸ் விழாவில் அனுஷ்கா ஷர்மா: கோலி ரியாக்ஷன்!